யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
பாரினிலே
யாவருமே கண்டதில்லை கண்டவரும் விண்டதில்லை
தேமதுரத் தமிழென்றால் தேன்சுவையும்
கூடிவரும்
தித்திக்கும் சொற்களுமே தானாக ஓடிவரும்
பாமரனும் அறிந்தமொழி பக்குவமாய்
வளர்ந்தமொழி
பாவலரும் போற்றுகிற பண்பட்ட நல்லமொழி
தாமதமும் இனிவேண்டாம் தமிழாநீ விழித்தெழுவாய்
தரம்கெட்ட பிறமொழிகள் நம்தமிழை அழித்துவிடும்
தேன்மணக்கும் இனியமொழி தனிச்சுவையில்
உயர்ந்தமொழி
தேவாரம் திருப்புகழென தன்னில்கண்டு வளர்ந்தமொழி
வான்புகழும் வள்ளுவனார் வகையுடனே
கண்டமொழி
வளமான சொற்கள்பல வேதமென கொண்டமொழி
வீண்வாதம் செய்வோரை வென்றுதான் நின்றமொழி
வின்னவரை யும்வென்ற நக்கீரனைக் கண்டமொழி
தானென்னும் ஆணவத்தைத் தவிடுபொடி
ஆக்கும்மொழி
தரங்கெட்ட பிறமொழியின் தயவினை நீக்கும்மொழி
தேமதுரத் தமிழோசை தெருவெங்கும் ஒளித்திடவே
தென்னாட்டுச் சிங்கங்களே உங்களது பங்கென்ன?
நாமமதில் வேற்றுமொழி நீக்கிடும்நல்
உள்ளங்களே
நல்லமனம் கொண்டதொரு நாயகனும் நீரன்றோ
பாமணக்கும் நல்லவரி பாடல்களை படைக்கவாரீர்
பண்பாட்டில் தமிழ்வழியைப் பக்குவமாய் கூட்டவாரீர்
மாமதுரை கவிஞர்பே ரவையின்றே கண்ட
மனமொன்றி தமிழ்காக்க புறப்படுவோம் வாரீர்.
குறிப்பு: 26.2.17 எழுச்சிக் கவியரங்கம்
No comments:
Post a Comment