Tuesday, August 22, 2017

தொண்டு உள்ளம் இரத்ததானம் .....(2) => 14.8.2017



தொண்டுள்ளம் என்றாலே தோன்றுமங்கு அன்பலைகள்              
     தொய்வின்றி தோள்கொடுக்கும் தோழமையும் கூடிவரும்         
 தொண்டுகளிற் சிறந்ததொரு தொண்றொன்று உண்டென்றால்          
     தன்னுடலில் நிறைந்துள்ள இரத்ததான மேயெனலாம்      
 நின்றுகொஞ்சம் சிந்தித்தால் நீள்வானம் போலாகி
      நித்தமொரு தானத்தால் நின்புகழை உயர்த்திடலாம்
 அன்றலர்ந்த மலர்போல அகிலத்தில் எந்நாளும்
      அனைவரிடம் இணையற்ற அபிமானம் நீபெறலாம்

தானமதி லேசிறந்த தானமிங்கு யாதெனவே               
      தேடியலைந் தாலுமுந்தன் தேடலெல்லாம் வீணன்றோ?                  
ஆனாலும் கோதானம் அன்னதானம் கண்தானம்                             
      அங்கமெலாம் தங்கமெனும் பொன்தானம் இவைகடந்து
மானமுள்ள உயிர்காக்கும் குருதிதானம் ஒன்றினையும்                       
      மனமுவந்து அளிப்பவரே மணிமகுடம் தரிப்பவராம்             
வானவரும் போற்றுகிற வளமென்றும் கண்டிடுவார்                  
      வையகத்தில் மெய்யிதுவாம் வாதிடவோ வேண்டிலனே 
 
     
தேனினிய சொல்லோடு தழுவுமிரு கைகளுடன்                  
     தருகின்ற தானமுனை தனியாகக்  காத்திடுமே .            
வான்பொழிய வரப்புயரும் வயலுமங்கு செழித்திடுமே                  
    வகையோடு விதைத்தாங்கு வளம்நன்கு கூடிடுமே            
கோனுயர குடியுயரும் குலமென்றும் தழைத்திடுமே                   
     கொற்றவனின் புகழ்பாடும் குரலுமங்கு ஓங்கிடுமே            
மீன்கொடியைத் தாங்குமன்னை மீனாட்சி யேசாட்சி                    
     மிகையில்லை இதிலுந்தன் மனசாட்சி சொல்லிடுமே!              

தானமென உன்குருதி தந்துதவ முன்வந்தால்                   
   தக்கவைத்த செல்வமெலாம் தங்கிடவும் மறுத்திடுமா?              
கானமயில் ஆடலிலே களைத்தாங்கே நின்றுவிட்டால்                
    கருமேகம் குளிர்ந்திடவே கனப்பொழுதும் மறந்திடுமா?           
காணிநிலம் வான்பொய்த்து கருகித்தான் போனாலும்               
    கைகொடுக்கும் பின்னொருநாள் கார்மேகம் தான்பொழிந்து;
ஏனினியும் உன்மனதில் எழுகின்ற தயக்கமதை
    எடுத்தெறிந்து வீசியின்றே இரத்ததானம் செய்திடுவாய்.                           &&&


14.8.2017 (நேதாஜி நினைவுநாள்) ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளி, மதுரை

தொண்டு உள்ளம் – இரத்த தானம் .........(1) => 14.8.2017




தானமதி லேசிறந்த தானம் எங்கும்                       
      தேடியலைந் தாலுமுந்தன் தேடல் வீணே                
ஆனாலும் கோதானம் அன்ன தானம்                        
      ஆசையுடன் பொன்தானம் தனையும் மிஞ்சி                                
கோணலின்றி உயிர்காக்கும் குருதி தானம்                   
      கொடுப்பவரே எந்நாளும் கோமான் ஆவார்                 
வானவரும் போற்றுகிற வளமே காண்பார்                  
      வையகத்தில் மெய்யிதுவாம் முயன்று பாரீர்!               

தொண்டுள்ளம் என்றாலே தோன்றும் அன்பில்              
     தொய்வின்றி தோள்கொடுக்கும் தகவும் சேரும்               
வென்றுவரும் நாளதிலே வலிமை கூடும்                      
      வேடிக்கை பார்ப்போரின் வெறியும் மாறும்                  
தொண்டுகளிற் சிறந்ததெனத் தொகுத்துப் பார்த்தால்         
      தன்வாழ்வை தானுயர்த்தும் தானம் ஆகும்                 
பண்டுதொட்டு தானத்தில் பெருமை சேர்க்க                    
      இன்றேநீ வழங்கிடுவாய் இரத்த தானம்                       

தானமென உன்பொருளைத் தந்து விட்டால்                  
   தக்கவைத்த செல்வமெலாம் கரைந்தா போகும்?               
கானமயில் ஆடலிலே களைத்து நின்றால்                    
    கருமேகம் குளிர்ந்திடவும் மறந்தா போகும்?                   
ஏணியதை எடுத்துவிட்டால் இடிந்து நோகும்                
    எண்ணமதை மாற்றிமெல்ல இறங்கி மீள்வாய்                
காணிநிலம் வான்பொய்த்து கருகிப் போனால்                  
    கரையுண்டுன் பேர்சொல்ல கவலை ஏனோ?                    

தேனினிய சொல்லோடு தழுவும் கைகள்                    
     தருகின்ற தானமுனை தனியாய் காக்கும் .                    
வான்பொழிய வரப்புயரும் வயலும் நீளும்                   
    வகையோடு விதைத்தாங்கு வளமே கூடும்                    
கோனுயர குடியுயரும் குலமும் வாழும்                     
     கொற்றவனின் புகழ்பாடும் குரலும் ஓங்கும்                   
மீன்கொடியைத் தானேந்தும் மீனாள் சாட்சி                   
     மிகையாகும் இதுவெனிலுன் மனமே சாட்சி!   
                       &&&

 (நேதாஜி நினைவுநாள்)
ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளி, மதுரை 

பெரியார் போற்றும் பெருந்தமிழன் => 28.5.2017



கோடிகோடி மக்களுடன் கொஞ்சியவர் இதயங்களை
     கொள்ளையடித் தேநாளும் கோபுரமாய் நின்றவரே!
மாடிவீட்டில் வாழ்ந்தாலும் மக்களோடு மக்களாக  
     மனிதநேயம் போற்றியவர் மாமன்னர் காமராசர்!
தேடியதோர் செல்வமென ஏதுமில்லை உனக்கென்றும்
     தேசத்தின் மேல்கொண்ட நேசமொன்றே உன்சொத்து
வேடிக்கை பார்த்ததில்லை வாய்ப்பந்தல் போட்டதில்லை
      விருதுபட்டி சிவகாமி அம்மைபெற்ற செல்லமகன்!

விண்ணில் வலம்வந்த சூரியனாய் அந்நாளில்
      மண்ணின் மைந்தனாக மகுடமதை சூடினாயே
எண்ணிப் பார்த்து எதிலும்மிக நேர்மையாக
     ஏழைகளை தன்நெஞ்சில் என்நாளும் சுமந்தாயே
மண்ணில் பிறக்கும் மழலைகள் யாவருமே
     மகிழ்வாய் கற்றிடவே குலக்கல்வி ஒழித்தாயே
பெண்ணின் பெருமைகூட்ட நேருமகள் இந்திராவை
     பிரதமராய் தேர்வுசெய்த பெருமையெலாம் உனக்கேதான்!

பொற்கால ஆட்சிதந்த புண்ணியவான் நீயானாய்
     புகழேணி உச்சியிலே எமைக்காத்த தாயானாய்
தற்பெருமை உன்னிலொரு துளியுமில்லை தூயவரே
     தான்கண்ட பாரதத்தை தலைநிமிரச் செய்தாயே
அற்பமெனும் செயலேதும் உன்னிடமே ஏதுமில்லை
     அரியணை ஒன்றினையே உன்னிலக்காய் கொண்டதில்லை
பொற்பாதம் தொட்டுன்னை துதித்திடவே தேடுகிறேன்
     பூவுலகில் மீண்டுமொரு பிறவிகண்டு வருவாயா?

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...