Tuesday, August 22, 2017

செந்தமிழை செழுந்தமிழாய் செய்வதுவும் வேண்டும் =>(30.4.2017)



நந்தமிழை செந்தமிழாய் கண்டவன்நீ தமிழா
    நல்லபடி உன்வழியில் மாற்றமினி வருமே              
சொந்தமொழி யாதெனவே உனைக்கேட்டால் தமிழா          
    செந்தமிழே உனதென்பாய் ஏற்றமினி தருமே              
சிந்தனையில் வேற்றுமொழி வேண்டாமே தமிழா
    சீரமைந்த வண்ணமொழி நாறிவிடும் அறிவாய்  
பந்தமது அறுந்துவிடும் பழியுனக்கேன் தமிழா
    பக்குவமாய் நல்லதெனப் பட்டமொழி தெரிவாய்
நாட்டினிலே செந்தமிழால் நற்கல்வி அளித்தால்
    நல்லதொரு வழிபிறக்கும் அருமையிலும் அருமை
பாட்டினிலே எளிமையினை புகுத்திநமைக் கவர்ந்த
    பாரதியின் நற்கனவில் நாமடைவோம் பெருமை 
காட்டினிலே வான்பொழிய தோகைமயில் அழகில்
    கூட்டிலொரு குயில்பாடும் பாவேந்தர் கவியில்  
ஏட்டினிலே எழுதியதை எடுத்துரைக்கும் துணிவில்   
    என்றுமொரு கவிபிறக்கும் உன்நாவால் புவியில்

தமிழன்னை புகழ்பாடி நாமொன்றை மறந்தோம்
    தயக்கமதை தள்ளிவைத்து நாமதையும் சொல்வோம்
தமிழுக்குப் புகழ்சேர்க்க தமிழ்மண்ணில் தவழ்ந்தே 
    தன்னலமே கருதாமல் தடையெல்லாம் வெல்வோம்
இமியேனும் குறைசொல்ல முடியாத அளவில்
    இலக்கியமும் எண்ணளவில் ஏராளம் படைப்போம் 
தமிழுக்குச் செழுமையினை இவ்வழியில் பெருக்கி
    தமிழுக்குப் பகையாகும் பிறமொழியைத் தடுப்போம்.
                         &&&
குறிப்பு: 30.4.2017 அன்று மாமதுரை கவிஞர் பேரவை கவியரங்கில் பாடப்பட்ட கவிதை

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...