Tuesday, January 15, 2019

தமிழ்காக்க கொட்டு முரசே கொட்டு


யாமறிந்/த மொழி/களி/லே தமிழ்/மொழிபோல் பாரில்                       
     யாரெவரும் கண்டிருந்தால் கூறுவரோ நேரில்         
தேமதுரத் தமிழென்றால் திகட்டாத தேனாம்            
     தித்திக்கும் சொற்களையும் மறந்ததுவும் ஏனாம்?            
பாமரனும் நந்தமிழை பாரெங்கும் கற்றான்
     பாவரிகள் படைக்கின்ற பக்குவமும் பெற்றான்
தாமதமும் இனிவேண்டாம் தமிழாநீ வாராய்
     தரம்கெட்ட பிறமொழிச்சொல் தடுத்திடவே நேராய்.
    
நானென்றும் தமிழனென மார்தட்டி நீயும்
    மற்றபிற மொழிச்சொல்லும் கலக்கின்றாய் நாளும்
ஏனென்று கேட்பவரை ஏளனம்தான் செய்தாய்
    எள்ளிநகை யாடிதமிழ் புகழதனைக் கொய்தாய்
மீன்விழியாள் மீனாட்சி ஆளுகின்ற மண்ணில்
    மிகையின்றி தமிழ்வாழ யாதுகண்டாய் உன்னில்?
வீண்பழியை ஏற்கத்தான் நீயின்றும் கண்டாய்
    விளையாட்டுத் பிள்ளையென வெறுபகையும் கொண்டாய்          

வான்புகழும் வள்ளுவனார் குறளடியால் இன்றும்
     வளமான இடம்கண்டார் நம்மனதில் என்றும்
தேன்மணக்கும் தொட்டிற்பா நம்தமிழில் உண்டு
    தள்ளிவைத்து ஏனம்மா தயங்குகிறாய் இன்று?  
தேன்மணக்கும் நந்தமிழோ சுவைதனிலே வானம்     
     தேவாரம் திருப்புகழில் பிறக்குமொரு கானம்
கோனென்றும் குடியென்றும் வேண்டாமே பேதம்
    கோவிலிலே முழங்கட்டும் தமிழ்வாச வேதம்

தேமதுரத் தமிழோசை நாடியெங்கும் செல்வோம்  
     தெருவெல்லாம் அதன்புகழை பாடிடவே செய்வோம்
பாமணக்கும் நல்லவரி பாடல்களும் வேண்டும் 
     பண்பாட்டில் தமிழன்புகழ் பரவிடவும் வேண்டும்
நாமமதில் நம்மதிப்பை உயர்த்திடவே நன்றே
     நல்வாக்கு இலக்கியங்கள் படைப்போமே இன்றே
மாமதுரை கவிஞர்பே ரவையிங்கு இன்றே 
     மன்றத்தில் தமிழ்போற்றும் வகையதுவும் நன்றே!


(11.09.2017)
உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை ஆய்வரங்கத்தில் வாசித்தது
  (ஏழைதாசன் என்னும் மாத இதழில் (மார்ச் 2018) வெளியானது)

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...