தமிழ்மொழி நமதிடை தவிக்கிற வகையினை
தமிழரும் அறிந்திலர் மறுத்திட முடியுமா?
அமிழ்கிற
மொழியினை அரவணைப் புடன்தினம்
அழகுறப் புழங்கிடும் நிலையினி விடியுமா?
குமிழென
வளமினி குவித்திடும் வழியினை
குறையற அறிந்தநீ தயங்கிடல் மடியுமா?
திமிருடன் தமிழ்மொழி வளம்பெறும் தகவுடன்
தெளிவுற உலகினில் களம்பெற இயலுமா?
பிறமொழி தமிழுடன் புரண்டிட அனுமதி
பிணைத்திடும் இழிநிலை இனிவர வேண்டாம்
தரமிகு தமிழினை தமிழனே தகர்த்திடும்
திமிரினை எதிலுமே வளர்த்திட வேண்டாம்
உரமிகு மனதினுள் உலவிடும் தமிழ்மொழி
உலகினில் தெருவினில் தவித்திட வேண்டாம்
பரங்கியன் மொழியினை கருவறு தமிழா
பகைவனை வளர்த்துநீ அழிந்திட வேண்டாம்
கனிமொழி எனதினம் வலம்வரும் மொழியினில்
கவிதைகள் பதமுடன் படைத்திடல் வேண்டும்
பணிவுடன் பலப்பல இலக்கிய வளத்தினை
பரிவுடன் தமிழினில் நிரப்பிட வேண்டும்
இனியொரு இழிநிலை மறைந்திட தினமினி
எகிறிடும் பகையினை ஒடுக்கிட வேண்டும்
துணிவுடன் பிறமொழி கலந்திடும் அவலமும்
தொடர்ந்திடும் கொடுமையை தடுத்திட
வேண்டும்.
(29.10.2017)
No comments:
Post a Comment