தானமதி லேசிறந்த தானம் எங்கும்
தேடியலைந் தாலுமுந்தன்
தேடல் வீணே
ஆனாலும் கோதானம் அன்ன தானம்
ஆசையுடன் பொன்தானம் தனையும் மிஞ்சி
கோணலின்றி உயிர்காக்கும் குருதி தானம்
கொடுப்பவரே எந்நாளும் கோமான் ஆவார்
வானவரும் போற்றுகிற வளமே காண்பார்
வையகத்தில் மெய்யிதுவாம் முயன்று பாரீர்!
தொண்டுள்ளம் என்றாலே தோன்றும் அன்பில்
தொய்வின்றி தோள்கொடுக்கும் தகவும் சேரும்
வென்றுவரும் நாளதிலே வலிமை கூடும்
வேடிக்கை பார்ப்போரின் வெறியும் மாறும்
தொண்டுகளிற் சிறந்ததெனத் தொகுத்துப் பார்த்தால்
தன்வாழ்வை தானுயர்த்தும் தானம் ஆகும்
பண்டுதொட்டு தானத்தில் பெருமை சேர்க்க
இன்றேநீ வழங்கிடுவாய் இரத்த தானம்
தானமென உன்பொருளைத் தந்து விட்டால்
தக்கவைத்த செல்வமெலாம் கரைந்தா போகும்?
கானமயில் ஆடலிலே களைத்து நின்றால்
கருமேகம் குளிர்ந்திடவும் மறந்தா போகும்?
ஏணியதை எடுத்துவிட்டால் இடிந்து நோகும்
எண்ணமதை மாற்றிமெல்ல இறங்கி மீள்வாய்
காணிநிலம் வான்பொய்த்து கருகிப் போனால்
கரையுண்டுன் பேர்சொல்ல கவலை ஏனோ?
தேனினிய சொல்லோடு தழுவும் கைகள்
தருகின்ற தானமுனை தனியாய் காக்கும்
.
வான்பொழிய வரப்புயரும் வயலும் நீளும்
வகையோடு விதைத்தாங்கு வளமே கூடும்
கோனுயர குடியுயரும் குலமும் வாழும்
கொற்றவனின் புகழ்பாடும் குரலும் ஓங்கும்
மீன்கொடியைத் தானேந்தும் மீனாள் சாட்சி
மிகையாகும் இதுவெனிலுன் மனமே சாட்சி! &&&
(நேதாஜி நினைவுநாள்)
ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன்
பள்ளி, மதுரை
No comments:
Post a Comment