Tuesday, January 15, 2019

கனவு மெய்ப்பட வேண்டும்



நானின்றோர் பார்வையாள னாகவந்தேன் என்றாலும்
தேனாயொரு கவிபாட தென்னவரும் ஆணையிட்டார்
ஏனென்று கேட்கவில்லை எழுதிவந்தேன் ஓர்கவிதை
தேனென்று சொல்லவில்லை தெரிந்ததோர் சிறுகவியே!

கண்ணுக்கு மையழகு கவிதைக்கு மெய்யழகு
பெண்ணுக்கு நடையழகு பேச்சுக்கு மொழியழகு
விண்ணுக்கு ஒளியழகு வீரனுக்கு வாளழகு
மண்ணுக்கு மரமழகு மன்னனுக்கு போரழகே!

பெண்ணடிமை நீங்கவேண்டும் பேசும்தமிழ் மலரவேண்டும்
விண்வெளியில் பாயவேண்டும் வீணர்களும் மாளவேண்டும்
முன்னோர்சொல் காக்கவேண்டும் முழுநிலவாய் வாழவேண்டும்
சொன்னதைநீ செய்யவேண்டும் சொர்க்கவாழ்வும் வருமுனக்கே!

சாதிகள் ஒழியவேண்டும் சமத்துவமே மலரவேண்டும்
வேதமும் தழைக்கவேண்டும் விந்தைபல புரியவேண்டும்
மாதமிரு மழைவேண்டும் மண்வளமும் கூடவேண்டும்
நாதமாய் நம்தமிழை நாடெங்கும் வளர்ப்போமே!
    
கனவொன்று இரவோடு கரைந்தேதான் போகாமல்
நனவாக்க நீயென்றும் நல்வாக்கு அளிப்பாயே!
மணியான மனதோடு மனிதநேயம் காப்பாயே
தனியாக வாழாமல் தரணியோடு சேர்ந்துவாழ்வாய்!
(போட்டி கவிதை / 28.1.2018)
உலகத் தமிழ் சங்கம், மதுரை

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...