Tuesday, August 22, 2017

தொண்டு உள்ளம் இரத்ததானம் .....(2) => 14.8.2017



தொண்டுள்ளம் என்றாலே தோன்றுமங்கு அன்பலைகள்              
     தொய்வின்றி தோள்கொடுக்கும் தோழமையும் கூடிவரும்         
 தொண்டுகளிற் சிறந்ததொரு தொண்றொன்று உண்டென்றால்          
     தன்னுடலில் நிறைந்துள்ள இரத்ததான மேயெனலாம்      
 நின்றுகொஞ்சம் சிந்தித்தால் நீள்வானம் போலாகி
      நித்தமொரு தானத்தால் நின்புகழை உயர்த்திடலாம்
 அன்றலர்ந்த மலர்போல அகிலத்தில் எந்நாளும்
      அனைவரிடம் இணையற்ற அபிமானம் நீபெறலாம்

தானமதி லேசிறந்த தானமிங்கு யாதெனவே               
      தேடியலைந் தாலுமுந்தன் தேடலெல்லாம் வீணன்றோ?                  
ஆனாலும் கோதானம் அன்னதானம் கண்தானம்                             
      அங்கமெலாம் தங்கமெனும் பொன்தானம் இவைகடந்து
மானமுள்ள உயிர்காக்கும் குருதிதானம் ஒன்றினையும்                       
      மனமுவந்து அளிப்பவரே மணிமகுடம் தரிப்பவராம்             
வானவரும் போற்றுகிற வளமென்றும் கண்டிடுவார்                  
      வையகத்தில் மெய்யிதுவாம் வாதிடவோ வேண்டிலனே 
 
     
தேனினிய சொல்லோடு தழுவுமிரு கைகளுடன்                  
     தருகின்ற தானமுனை தனியாகக்  காத்திடுமே .            
வான்பொழிய வரப்புயரும் வயலுமங்கு செழித்திடுமே                  
    வகையோடு விதைத்தாங்கு வளம்நன்கு கூடிடுமே            
கோனுயர குடியுயரும் குலமென்றும் தழைத்திடுமே                   
     கொற்றவனின் புகழ்பாடும் குரலுமங்கு ஓங்கிடுமே            
மீன்கொடியைத் தாங்குமன்னை மீனாட்சி யேசாட்சி                    
     மிகையில்லை இதிலுந்தன் மனசாட்சி சொல்லிடுமே!              

தானமென உன்குருதி தந்துதவ முன்வந்தால்                   
   தக்கவைத்த செல்வமெலாம் தங்கிடவும் மறுத்திடுமா?              
கானமயில் ஆடலிலே களைத்தாங்கே நின்றுவிட்டால்                
    கருமேகம் குளிர்ந்திடவே கனப்பொழுதும் மறந்திடுமா?           
காணிநிலம் வான்பொய்த்து கருகித்தான் போனாலும்               
    கைகொடுக்கும் பின்னொருநாள் கார்மேகம் தான்பொழிந்து;
ஏனினியும் உன்மனதில் எழுகின்ற தயக்கமதை
    எடுத்தெறிந்து வீசியின்றே இரத்ததானம் செய்திடுவாய்.                           &&&


14.8.2017 (நேதாஜி நினைவுநாள்) ரோஸ்மேரி மெட்ரிகுலேஷன் பள்ளி, மதுரை

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...