கோடிகோடி மக்களுடன் கொஞ்சியவர் இதயங்களை
கொள்ளையடித் தேநாளும் கோபுரமாய் நின்றவரே!
மாடிவீட்டில் வாழ்ந்தாலும் மக்களோடு மக்களாக
மனிதநேயம் போற்றியவர் மாமன்னர் காமராசர்!
தேடியதோர் செல்வமென ஏதுமில்லை உனக்கென்றும்
தேசத்தின் மேல்கொண்ட நேசமொன்றே உன்சொத்து
வேடிக்கை பார்த்ததில்லை வாய்ப்பந்தல் போட்டதில்லை
விருதுபட்டி சிவகாமி அம்மைபெற்ற செல்லமகன்!
விண்ணில் வலம்வந்த சூரியனாய் அந்நாளில்
மண்ணின் மைந்தனாக மகுடமதை சூடினாயே
எண்ணிப் பார்த்து எதிலும்மிக நேர்மையாக
ஏழைகளை தன்நெஞ்சில் என்நாளும் சுமந்தாயே
மண்ணில் பிறக்கும் மழலைகள் யாவருமே
மகிழ்வாய் கற்றிடவே குலக்கல்வி ஒழித்தாயே
பெண்ணின் பெருமைகூட்ட நேருமகள் இந்திராவை
பிரதமராய் தேர்வுசெய்த பெருமையெலாம் உனக்கேதான்!
பொற்கால ஆட்சிதந்த புண்ணியவான்
நீயானாய்
புகழேணி உச்சியிலே எமைக்காத்த தாயானாய்
தற்பெருமை உன்னிலொரு
துளியுமில்லை தூயவரே
தான்கண்ட பாரதத்தை தலைநிமிரச் செய்தாயே
அற்பமெனும் செயலேதும் உன்னிடமே
ஏதுமில்லை
அரியணை ஒன்றினையே உன்னிலக்காய் கொண்டதில்லை
பொற்பாதம் தொட்டுன்னை
துதித்திடவே தேடுகிறேன்
பூவுலகில் மீண்டுமொரு பிறவிகண்டு வருவாயா?
No comments:
Post a Comment