யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல் பாரில்
யாரெவரும் கண்டதில்லை காணேன் நேரில்
தேமதுரத் தமிழென்றால் சுவையில் தேனாம்
தித்திக்கும் சொற்களையும் மறந்த தேனாம்?
பாமரனும் நந்தமிழை எளிதாய்க் கற்றான்
பாவரிகள் படைக்குமோர் திறனும் பெற்றான்
தாமதமும் இனிவேண்டாம் தமிழா வாராய்
தரம்கெட்ட பிறமொழிச்சொல் தடுப்போம் நேராய்.
வான்புகழும் வள்ளுவனார் குறளால்
இன்றும்
வளமான இடம்கண்டார் நம்மில் என்றும்
நான்வியக்கும் தொட்டிற்பா தமிழில்
உண்டு
தயக்கமும் ஏனம்மா பிறரைக் கண்டு?
தேன்மணக்கும் நந்தமிழோ சுவையில்
வானம்
தேவாரம் திருப்புகழில் பிறக்கும் கானம்
கோனென்றும் குடியென்றும் வேண்டாம்
பேதம்
கோவிலிலே முழங்கட்டும் தமிழில் வேதம்
.
தேமதுரத் தமிழோசை தேடிச் செல்வோம்
தெருவெல்லாம் அதன்புகழை பாடிச் சொல்வோம்
பாமணக்கும் நல்லவரி பாடல் வேண்டும்
பண்பாட்டில் தமிழன்புகழ் தேடல் வேண்டும்
நாமமதில் நம்மதிப்பை உயர்த்த நன்று
நல்வாக்கு இலக்கியங்கள் படைப்போம் இன்று.
மாமதுரை கவிஞர்பே ரவையும் இன்று
மன்றத்தில் தமிழ்போற்றும் வகையும் நன்று.
&&&
குறிப்பு: 18.5.2017 அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் படைக்கப்பட்டது
No comments:
Post a Comment