Tuesday, January 15, 2019

தமிழ்வாழ்க எனச்சொன்னால் தமிழிங்கு வளர்ந்திடுமா?


தமிழென்றால் அமுதென்பார் தரணியிலே மாந்தர்  
     தனித்தமிழை வளர்ப்பதிலே தளர்ந்திடாத வேந்தர் 
அமுதமென மலர்கின்ற அருஞ்சொற்கள் ண்டு
     அதைத்தேடி வந்திடுமே அருகிலொரு வண்டு     
அமிழாத தமிழ்க்கப்பல் ஆன்றோரின் வாக்கில்
     அதையென்றும் காத்திடுவர் அவர்தம்நல் நோக்கில் 
நிமிடமொரு நிலைமாறின் நிம்மதியும் தாண்டும்   
     நித்தமிதை நம்மனதில் நிலைநிறுத்த வேண்டும்!

பைந்தமிழின் ஏட்டினிலே பல்சுவையு முண்டு
     பாமரனின் நாவினில்நற் படைப்புகளும் உண்டு
ஐந்துவகை நிலவிளக்கம் அருந்தமிழில் கண்டு
     ஆர்ப்பரிக்கும் கடலலையும் அடங்குவதும் உண்டு
ஐந்தருவி போல்தமிழில் அருமைமிகு பாக்கள்
     அன்றாட வாழ்வினிலே மலர்கின்ற பூக்கள்
நைந்துபோன துகிலல்ல நந்தமிழின் வாசம்
     நாவலரும் பாவலரும் நடனமிடும் நேசம்!
  
இத்தனையும் தமிழுக்கு இயல்பான பண்பாம்
     இதைபலரும் உணராமல் இருப்பவரிங் குண்டாம்
தத்துவங்கள் பலபேசி தமிழ்வாழ்க என்றால்
     தமிழிங்கு வளர்ந்திடுமா தரணியிலே நன்றாய்?
சித்தமுடன் பிறமொழிச்சொல் சிறிதாங்கே நோகும்
     சிறகொடிந்த பறவையென சிதறித்தான் போகும்     
நித்தமிதை சிந்தித்து நற்றமிழில் நாளும்
     நாணமின்றி பேசிடவே நம்தமிழும் வாழும்!


[27.8.2017]

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...