Tuesday, August 22, 2017

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்..... (2)=> 20.4.17



தமிழுக்கு அமுதென்றே பேரென்று சொன்னால்                 
      தன்சுவையில் செங்கரும்புச் சாராம்                                
தமிழெங்கள் உயிருக்கு நேரென்று சொன்னால்              
          தனிமைக்கு துணையாகும் தாயாம்     
அமிழ்தத்தை மிஞ்சுகிற மொழியென்று சொன்னால்    
         அறியாமை அகற்றுமொரு ஒளியாம்     
குமிழுக்குள் ஒளிர்கின்ற ஒளியென்று சொன்னால்            
         குறுநகையில் புன்முறுவல் சிலையாம்             

முத்தினை வெல்லும் மொழியென்று சொன்னால்
          முத்துக்குள் ஒளிரும் மணியாம்
தித்திக்கும் தேன்சுவை மொழியென்று சொன்னால்
          திகட்டாத தெள்ளமுது சுவையாம்
பத்தரை மாற்று பொன்னென்று சொன்னால்
         பகுத்தறிவு மானிடர்க்கு புகழாம்
சித்திரை திங்களுடன் பிறக்குமென சொன்னால்
         சீராக ஆண்டெல்லாம் சிறப்பே

இத்தனை புகழுக்கும் தகுமென்று சொன்னால்
          எத்துனை மொழிகட்கும் மேலாம்
தத்துவம் நிறைந்ததொரு மொழியென்று சொன்னால்
          சத்தியம் காக்கும் விழியாம்
பத்தினி குணம்கொண்ட மொழியென்று சொன்னால்
          பக்தர்கள் வியக்கும் மொழியாம்
வித்தகர் போற்றும் மொழியென்று சொன்னால்
          வித்துக்குள் வித்தான மொழியாம்         

எண்ணிய சிறப்புகள் இவைதானா? - இல்லை
        இன்னும் எத்தனையோ உண்டாம்
பின்னிய இலக்கிய மொழியென்று சொன்னால்
        பிழைநீக்கும் இலக்கண மொழியாம்
அன்னிய மொழிகளை வெல்லுமெனச் சொன்னால்
        அத்தனை மொழிகட்கும் அரசாம்
நுண்ணிய உயிருக்கு நேரென்று சொன்னால்  
        நிலையற்ற உயிருக்கும் மேலாம்.
                      &&& 
குறிப்பு: 20.04.2017 அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் நிலா கவியரங்கம் -3 ல் படைக்கப்பட்டது

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...