Tuesday, August 22, 2017

தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.......(1)=> (20.04.2017 )



தமிழுக்கு அமுதென்று பேரென்பார் - நானோ            
         தன்சுவையில் செங்கரும்புச் சாரென்பேன்            
தமிழெங்கள் உயிருக்கு நேரென்பார் - நானோ              
         தனிமைக்கு துணையாகும் தாயென்பேன்      
அமிழ்தத்தை மிஞ்சுகிற மொழியென்பார் - நானோ    
         அறியாமை அகற்றுமொரு ஒளியென்பேன்     
குமிழுக்குள் ஒளிர்கின்ற ஒளியென்பார் - நானோ             
         குறுநகையில் புன்முறுவல் சிலையென்பேன்             

முத்தினை வெல்லும் மொழியென்பார் - நானோ
          முத்துக்குள் ஒளிரும் மணியென்பேன்
தித்திக்கும் தேன்சுவை மொழியென்பார் - நானோ
          திகட்டாத தெள்ளமுது சுவையென்பேன்
பத்தரை மாற்று பொன்னென்பார் - நானோ
         பகுத்தறிவு மானிடர்க்குப் புகழென்பேன்
சித்திரைத் திங்களுடன் பிறப்பென்பார் - நானோ
         சீராக ஆண்டெல்லாம் சிறப்பென்பேன்

இத்தனை புகழுக்கும் தகுமென்பார் - நானோ
          அத்துனை மொழிகட்கும் மிகுமென்பேன்
தத்துவம் நிறைந்ததொரு மொழியென்பார் - நானோ
          சத்தியம் காக்கும் விழியென்பேன்
பத்தினி குணம்கொண்ட மொழியென்பார் - நானோ
          பக்தர்கள் வியக்கும் மொழியென்பேன்
வித்தகர் போற்றும் மொழியென்பார் - நானோ
          வித்துக்குள் வித்தான மொழியென்பேன்         

போற்றிப் புகழ்ந்தது போதுமென்பார் - நானோ
         போற்றி மகிழ்ந்தது போதாதென்பேன்
ஏற்றம் இனிமேல் இல்லையென்பார் - நானோ        
         ஈனர்கள் வாய்மொழி தோற்குமென்பேன்
ஆற்றுப் படுகை மணலென்பார் - நானோ
         அருஞ்சுனை ஊற்றெடுக்கும் வயலென்பேன்
ஊற்றும் ஒருநாள் ஓயுமென்பார் - நானோ
         ஊரும் சேற்றிலும் மலருமென்பேன்

எண்ணிய சிறப்புகள் இவைதானா? - இல்லை
        இன்னும் எத்தனையோ உண்டென்போம்
பின்னிய இலக்கிய மொழியென்பார் - நாமோ
        பிழைநீக்கும் இலக்கண மொழியென்போம்
அன்னிய மொழிகளை வெல்லுமென்பார்நாமோ
        அத்தனை மொழிகளையும் ஆளுமென்போம்
நுண்ணிய உயிருக்கு நேரென்பார் - நாமோ  
        நிலையற்ற உயிருக்கும் மேலென்போம்.
                        &&&
குறிப்பு: 20.04.2017 அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கம் தமிழ் நிலா கவியரங்கம் -3 ல் படைக்கப்பட்டது

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...