Sunday, August 20, 2017

தமிழ் எழுத்தால் முடியாதா? தனித்தொலித்தால் விடியாதா? ........(2)=>(17.7.16)



உன்னால் முடியும், என்னால் முடியாதா என்பதெல்லாம்
இந்நாளில் எனக்கு மட்டுமல்ல தங்கமே உனக்கும்தான்.
தமிழுக்கு அடிமை நானென்பார் ஆனால் தனித்தமிழைத் தள்ளி வைப்பார்,
தமிழுக்கு அமுதென்று பேரென்பார் இதுவும் வெறும் வாய்ச்சொல்லே.

தனித்தமிழ் வேண்டுமென்பார் தமிழோடு வேற்றுமொழி சேர்த்திடுவார்,
இனிமைதான் என்றாலும் தனிமையில் வலிமை இல்லை என்பார்.
வணிகப் பலகைகள் தமிழில் இருந்தால் மதிப்பில்லை என்பார்,
மணியான தமிழ்மறந்து ஆங்கிலத்தில் அதைப் படைப்பார்.

எதையும் வெறும் வாயால் சொன்னால் நம்புவார் யாருமில்லை,
இதையும் சான்றுடன் சொன்னால்தானே சபையேறும்? இதோ சான்றுகள்.
பழச்சாறு கடையதனை ஜூஸ் சென்டர் என்பது ஏனோ? மதுவில் மயங்கி
மதுக்கடை என்பதை மறந்து ஒயின்ஷாப் என்பதும் ஏனோ?

சிதைந்த மொழியில் ஓம் என்பதை OHம் என்றும் ‘SIVA’ என்பதை சிVA என்றும்
வதைக்கும் இருமொழி கலப்புச் சொல்லில் என்னதான் கண்டனரோ?
தனித்தொலிக்கும் பெருவலிமை தமிழுக்கும் உண்டன்றோ! போதும்
இனியும் தமிழெழுத்தால் இயலாதெனச் செப்பினால் தமிழ் அழிந்தே போகும்.   

நகரத்தோடு னகரணகர வேறுபாடுகள் வெறும் விளையாட்டல்ல
லகரத்தோடு ழகரளகர அலங்காரம் வேறெந்த மொழியிலுண்டு? -தங்கமே
தமிழ் எழுத்தால் முடியாதெனில் எம்மொழிக்கும் அவ்வலிமை இல்லை
தனித்தொலித்தால் விடியாதென்ற எண்ணத்தைத் தகர்த்திடுவோம்.  

குறிப்பு: (17.7.16) காமராசர் பிறந்த நாள் விழாவில் வெ.ராம்பிரபு படைத்தது

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...