Monday, August 21, 2017

புண்ணியம் ஆயிரம் செய்தாலும் தமிழைக் காப்பதுவே புனிதமாம்.... (30.12.16)



தமிழனாய் நீபிறந்து தமிழ்ப்பால் தானருந்தி 
      தவழ்ந்தாங்கு நடைபயின்ற தமிழா!
அமிழ்தமாய் உன்தாயைஅம்மாஎன்றழைத்து
      அச்சொல்லை நீமறந்தாய் சரியா?
உமிழ்கின்ற எச்சிலென அம்மாவை மம்மியென்றே
      உளறியதன் பொருளென்ன அறிவாயா?
தமிழென்னும் ஒருசொல்லை பரங்கியனோ டமில்என்றான்
      தட்டித்தான் அதைநீயும் கேட்டாயா?

ஒருபானை சோற்றுக்கு ஓரரிசி பதம்போல
     ஒன்றையே குறிப்பிட்டேன் உணர்வாய்நீ
உருமாறி உன்னையே நீமறந்துன் தமிழேட்டில்
     உள்ளாக மொழிகலப்பு கலைவாய்நீ
தெருவோரம் தமிழ்பேசி தலைகுனிந்துன் தமிழேட்டில்
     தரங்கெட்ட பிறமொழிச்சொல் இனிவேண்டாம்.
வரும்நாளில் தமிழன்னை தனித்தியங்க வழிதேடி
     வானவரும் தான்புகழும் நிலைவேண்டும்.

இன்னும்நீ உன்வழியும் தனிவழிதான் என்றாகி
     இழிவான பிறமொழிச்சொல் கலப்பாயா?
உன்மானம் காத்திடவே என்னாளும் தமிழேட்டில்
     தமிழெனும் சந்தனத்தை மறப்பாயா?
தின்னமாய் உன்னறிவை தமிழுக்கே அர்ப்பணித்தால்
     தாய்தந்தை சொல்லெதையும் தட்டாமல் நீயுணர்ந்து
புண்ணியம் ஆயிரம் செய்தாலும் தமிழுணர்வை 
      புகழ்ந்தென்றும் காப்பதுதான் புனிதமாம் அறிவாய்நீ.

குறிப்பு: 30.12.16 அன்று மாமதுரை கவிஞர் பேரவையின் கவியரங்கில் படைக்கப்பட்ட கவிதை.

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...