கம்பன் வீட்டுக் கட்டுத் தறியும் கவிபாடும் என்பதுபோல்
நம்தம் பாரதி வளர்த்த ஆவிரண்டும் அழகாய் கவிபாடுமாம்.
வம்பும் வழக்கும் வேண்டாம் இந்நாள் பாரதி பிறந்தநாளில்
நம்புங்கள் என்நெஞ்சில் நிழலாடும் வேதனை கூறுவேன் கேளீர்.
நானும் தமிழன்தான் என்தாயும் தமிழச்சி தானென்று பறைசாற்றி
தேனும் பாலுடனே தெவிட்டாத அமிழ்தமென நாளும் தமிழ்போற்றி
காணும் இடமெல்லாம் கன்னித்தமிழ் ஒன்றேஎன் கனவென்று கூறினாலும்
வானும் நிலவும் உனைவாழ்த்த மறுப்பதன் மர்மமென்ன தமிழா?
நெஞ்சு
பொறுக்குதில்லை
நானின்று நோகின்றேன் தமிழின்று அழிகிறது
அஞ்சியே சாகின்றார் தமிழில் அயல்மொழிச் சொல் கலக்கின்றார்.
கொஞ்சிப்
பேசுகின்ற அம்மாவும் அப்பாவும் மம்மிடாடி ஆகிவிட்டார்.
வஞ்சிக் கொடியாள் மிஸ்ஆகி அம்மையார் மேடமாகி விட்டனரே.
கெஞ்சிக் கேட்கிறேன் தமிழா பாரதி பிறந்த இந்நாளில்
கொஞ்சம் சிந்தித்துப் பாரடா தமிழில் பிறமொழிச்சொல் ஏனடா?
தஞ்சம் புகுந்த பிறமொழிகள் நம்மை கொஞ்சம் கொஞ்சமாய்
வஞ்சித்து நம்தமிழின் வளம்கெடுத்து தாம்வாழப் பார்ப்பதுவும் கொடுமைதான்.
சூடு சொரணை இல்லையா தமிழா வீண்வாதம் வேண்டாமே
கேடு கெட்ட கயவரென்றும் வாழ்ந்ததாக சரித்திரம் இல்லை
நாடு வாழ நாமும் வாழ நந்தம் தமிழும் வாழ
பீடு நடை போட்டு வாரீர் பின்னடைவைப் போக்க வாரீர்.
குறிப்பு:
11.12.16 அன்று மாமதுரை கவிஞர் பேரவையின் பாரதி பிறந்தநாள் விழா சிறப்பு கவியரங்கில் படைக்கப்பட்ட கவிதை
No comments:
Post a Comment