சங்கம் வளர்த்த தமிழ், தமிழ்ச் சங்கமதில் வளர்ந்த தமிழ்
எங்கும் நிறைந்த தமிழ், ஏற்றம்பல கண்ட தமிழ் - இறைவா
அங்கம் எல்லாம் துடிக்குதையா தமிழின் இன்றைய நிலை எண்ணி.
பொங்கி வரும்என் கண்ணீரை இச்சபையில் யார்தான் துடைக்க வல்லார்?
கன்னம் வைத்தாற்போல் கயவர்கள் தனித்தமிழை தன்போக்கில் கெடுக்கின்றார்
இன்னமும் சுருங்கச் சொன்னால் தமிழைக் குழிதோண்டி ஆழப் புதைக்கின்றார்.
என்னம்மா என்அருமை கண்ணம்மா! எனக்கொரு தீர்வை நீயே சொல்லம்மா
தின்னமாய் கேள்வியொன்று முன்வைப்பேன் தமிழில் சமற்கிருத கலப்பும் ஏனம்மா?
வேட்டியை வேஷ்டி என்றும் சேட்டையை சேஷ்டை என்றும் சொல்லி
கூட்டிக் கழித்து குப்பையைக் கொட்டி நந்தம் தமிழை நாறவைத்தார்.
ஆட்டிப் படைக்கும் அர்த்தமற்ற இச்செயலை இனியும் யார்தான் பொறுப்பார்?
சாட்டையடி கொடுக்க வாரீர் சண்டாளர் செயலதனைச் சாட வாரீர்.
சற்றும் தயங்காமல் சபையினில் சங்கரனை எதிர்த்து வென்ற நக்கீரா,
கற்றோர் வளர்த்த தனித்தமிழில் இன்று சமற்கிருத கலப்பு ஏனைய்யா?
குற்றம் காணேன் செழுமைமிகு நம்தமிழில் ஆனாலும் மொழியின்று சிதைந்ததுவே;
பெற்ற பெருமையினை பேணிக் காக்க ஓடிவாரீர் ஒருகணம் ஓலமிட்டேன்.
மடைதிறந்த வெள்ளமாய் மணக்கும் சொற்கள் தமிழில் ஆயிரம் இருக்கையில்
கடைவாசல் திறந்து வைத்து கசக்கும் சமற்கிருத சொற்களை ஏற்பதேனோ?
அடைமழை ஓய்ந்தபின் பார்க்கலாம் என்றால் நீதோற்று விடுவாய் தமிழா
படைநடுங்க பாய்ந்து வருவாய் நம்மானம் கப்பலேற வேண்டாம் தமிழா.
நன்றி. விடை பெறுகிறேன்.
குறிப்பு: 27.11.2016 அன்று மாமதுரை கவிஞர் பேரவையின் தனித்தமிழ்
இயக்க நூற்றாண்டு
விழா கவியரங்கில் படைக்கப்பட்ட கவிதை.
No comments:
Post a Comment