Sunday, August 20, 2017

பெருமைமிகு தமிழ்மொழியா? பிறஎழுத்துக் குப்பைமேடா?....(23.10.16)



பெருமைமிகு தமிழ்மொழியா? பிறஎழுத்துக் குப்பைமேடா? இதற்கிங்கு பதிலுண்டா?
பெருமையினை அறியாமல் புழங்கும் இடமெல்லாம் பிறமொழி சொல்கலந்து
தெருவில் கொட்டுகின்ற குப்பை மேடாக்கி தமிழைக் கெடுக்கின்றார்  
திரும்பிப் பாராமல் தளர்நடை போடுகின்றார் தண்டச்சோற்றில் வாழுகின்றார். 

நெஞ்சு பொறுக்குதில்லை கண்ணம்மா தமிழுக்கு நேர்ந்த கதியெண்ணி
கொஞ்சிப் பேசுவது போலெண்ணி அம்மாவை மம்மி என்றார்
அஞ்சாமல் அப்பாவை டாடியென்றார் எங்கேபோய் முடியுமோ நானறியேன்
நெஞ்சார வாழ்த்திடவோ மனமில்லை தமிழைக் குழப்புகிறார்.

கந்தல் துணியானாலும் கசக்கிக் கட்டு கடைசிவரை நீவுயர்வாய் -அதன்
பந்தம் அறுந்து போனால் பரிதவித்து சோர்ந்து போவாய் -இதுபோல்
நந்தம் தமிழதனை நாளும் பேணுவது உன்கடமை மறவாதே -என்றும்
சொந்தமொழி உனக்குண்டு கண்ணம்மா பிறமொழிச்சொல் குப்பை வேண்டாம். 

குப்பையைக் குவித்து நாளும் தீயிட்டுக் கொளுத்திவிடு கோமளமே
தப்பேதும் நேராமல் தனித்தமிழில் பேசிடுவாய் தங்கமே என்செல்வமே
அப்பழுக்கற்ற சொந்தமொழி ஒன்றிருக்க அயல்மொழி பிச்சை எதற்கு?
செப்பியதைச் செவ்வனே செய்தால் தப்பிவிடும் நம்தமிழின் பெருமை.

கொட்டிக் கிடக்கும் குப்பையைக் கிண்டினால் ஒன்றும் தேராது
எட்டிக் குவிந்து மக்கி அழியட்டும் நமக்கது வேண்டாம் நாசமாய் போகட்டும்.
பட்டிதொட்டி எல்லாம் பெருமை பாடுவோம் நந்தமிழ் அன்னைவாழ்க
சட்டமொன்று தேவையில்லை கட்டாயம் தமிழ்வாழ குப்பையைக் கொளுத்திடுவோம்

குறிப்பு: 23.10.16 – அன்று மாமதுரை கவிஞர் பேரவையின் எழுச்சி கவியரங்கத்தில் படைக்கப்பட்ட கவிதை. 

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...