தமிழுக்கு அமுதென்று
பேரென்றால் அந்த தமிழேநம்
உயிரென்போம்
அமிழ்தத்தில் பொங்கிவரும்
தேனென்றால் அந்த தேன்கூடும்
நாமேயென்போம்.
குமிழுக்குள் ஒளிரும்மின்
இழையென்றால் அந்த இழைக்குள்ளும்
நாமென்போம்
நிமிடத்தில் எழுகின்ற
கவியென்றால் அந்த கவிதைக்குநாம்
கருவென்போம்.
இன்றிங்கு
ஒன்றுசொல்ல ஓடிவந்தேன் ஒருகனம்
சிந்தித்துப் பாருங்கள்
ஒன்றல்ல இரண்டல்ல
ஓராயிரம் உச்சரிப்பு தமிழில்
உண்டு.
தொன்று தொட்டு
வளர்ந்த தமிழ் தொல்காப்பியன்
கண்டதமிழ்
சென்றவிட மெல்லாம்
செருபகை வென்று வெற்றிவாகை
சூடும்தமிழ்.
ஆயிரம் உச்சரிப்பு
மாறினும் தமிழில் தடுமாற்றம்
இல்லை
பாயிரம் தந்தாலும்
பங்கெடுக்க பிறமொழிபுக இடமில்லை
இங்கு.
தாயிடம் மடிதவழ
எமக்கு மட்டுமே இடமுண்டு
யாரேதும்
ஆயிரம்தான் சொன்னாலும்
தமிழில் அயலெழுத்து வந்துபுகல்
என்னநீதி?
அயல்மொழி ஆதிக்கம்
கண்டு ஆத்திரம் கொள்ள
வேண்டாம்
கயல்விழி பார்வையால்
நம்தமிழை நாளும் காத்திடுவோம்.
வயல்வெளி தென்றலில்
தமிழ்க் கவிதைகள் பல
படைப்போம்
இயலிசை நாடகமென
எதிலும் திகழும் தமிழுக்கு
இணையில்லை.
பிறமொழி சொல்லும்
ஒலியும் நம்மை அழித்திட
அனுமதியோம்
அறவழி நம்வழி
அவ்வழி என்றும் தமிழைக்
காக்கும்.
திறவாத கதவையும்
திறமிகு கவிதையால் திறக்கச்
செய்வோம்
இறவாத வரம்பெற்று
என்றென்றும் சிறக்கக் காண்போம்
தமிழை.
குறிப்பு: 25.9.2016 அன்று மாமதுரை கவிஞர் பேரவையின் எழுச்சி கவி அரங்கத்தில் வாசிக்கப்பட்ட கவிதை.
No comments:
Post a Comment