சித்திரமும் கைப்பழக்கம் செந்தமிழும் நாப்பழக்கம்
மத்தியிலே உன்செயலில் மல்கிடுதே தீப்பழக்கம்!
நெத்தியடி யாயுரைப்பேன் நிக்கோடின் நச்சினையே
மெத்தனத்தில் தீப்புகையாய் மேனிபுக மெச்சினாயே!
கத்திமுனைச் சொற்களையே கம்பருடன் வள்ளுவரும்
முத்தமழைச் சொற்களுடன் முன்வைக்க துள்ளிவரும்!
அத்தனையும் மறந்தேஉன் ஐந்தறிவும் தேய்கிறதே
மத்தளமாய் உன்பேச்சில் மாற்றுமொழி பாய்கிறதே!
புத்திகெட்டு உன்னுடலை பூக்குழியில் வாட்டுகிறாய்
தத்துவமும் பேசியுன்னுள் தாவிடும்நோய் கூட்டுகிறாய்!
சித்தமுட னேபுகைத்து சீரழிந்து போய்விடுவாய்
உத்தரவு யாரளித்தார் உன்னுள்புகை சேர்த்திடவே!
பெத்தமனம் பித்தென்றும் பிள்ளைமனம் கல்லென்றும்
இத்தரையில் எல்லோரும் ஏற்கின்ற சொல்லன்றோ!
முத்தெனவே உன்தமிழே மூச்சுமொழி யாயிருக்க
புத்திதடு மாறிஇன்று போற்றுகிறாய் பகைஎழுத்தே!
நீயின்று தாய்த்தமிழை நிந்தித்தே பாடுகிறாய்
தேய்கின்ற வெண்ணிலவாய் தேன்தமிழைச் சாடுகிறாய்!
வாய்கிழியும் பேச்சினிலே வந்தேறி சொல்படிந்தால்
தாய்மொழியாம் உன்தமிழும் தள்ளாடு மேஒடிந்தே!
நாடுகின்ற எச்செயலும் நற்செயலாய் மாறட்டும்
மேடுபள்ளம் நீயறிந்து மேனிநலம் தேறட்டும்!
கேடுதரும் புகைப்பழக்கம் கிள்ளியெறி நல்லபடி
ஊடுகளை பகையெழுத்து உதவாதுன் தமிழுக்கே! (இது ஏழைதாசன் என்னும் மாத இதழில் (மே 2018) வெளியானது)
No comments:
Post a Comment