தமிழ்த்தாயை மதித்துலகில் தலைவணங்க மறுப்பவரும்
சமற்கிருத எழுத்தினையே சரளமுடன் கலப்பவரும்
அமர்க்களமாய் பிறமொழியை அணைத்துமனம் குளிர்பவரும்
நமக்கினியும் உதவாரென நன்கறிவாய் தமிழினமே!
இலக்கியத்தில் இன்றளவும் இமையமொத்த படைப்புகளும்
இலக்கணத்தில் குன்றெனவே எடுத்தியம்பும் ஏடுகளும்
கலக்கமின்றி கடைந்தெடுத்த கருத்துக்களின் சாரங்களும்
உலக்கையிடி போல்நமக்கு ஊட்டுகிற தமிழொன்றே!
சொடுக்குமேல சொடுக்குபோடும் சொகுசுத்தமிழ் பாடலுக்கு
படுத்துறங்கும் குழந்தைகூட படுக்கையிலே ஆடுதையா!
தொடுக்குமொரு தமிழ்க்கவியும் தொடர்மழையின் ஆடலுக்கு
அடுக்குமொழி தவழ்ந்துவந்து அங்கமெலாம் பாயுதையா!
சிமிக்கிகம்மல் காதில்மாட்டி சிறகடித்து நடனமாடும்
சமற்கிருத கலப்புமொழி சரிவினைத்தான் கொடுத்திடுமே!
தமக்கையென தளுக்கிவந்து தமிழ்மணமும் குறைந்திடுமே
நமக்கென்றும் உதவாத நயவஞ்சக மொழியெதற்கு?
அழுக்குமேல அழுக்குசேர்ந்து அழகுதமிழ் மடியலாமா
தளுக்குமேணி தனைக்குலுக்கி தமிழனையே ஒதுக்குகிற
சிலுக்குமேணி சமற்கிருதம் சிறிதளவும் நமக்கெதற்கு?
முழுக்குபோடு பிறமொழிக்கே முழங்குதமிழ் வளர்ந்திடவே!
உலகளவில் தமிழ்மொழியும் உலவிவர வழிவிடுவோம்
நலமுடனே தமிழ்க்கடலின் நறுமணமும் பரவிடவும்
குலமுயர கலைமி0ளிரும்
குலப்பெருமை தனைக்கருதி
நிலவெனவே
தமிழ்காக்க நிமிர்ந்தநடை எடுதமிழா! (25.3.2018)
No comments:
Post a Comment