Tuesday, January 15, 2019

சுதந்திர வானில்


காலையிலே துயிலெழுந்து கவலையெல்லாம் போக்கிடவே
சாலையோரம் பாய்விரித்து சலனமின்றி துயில்பவரை
மூலையிலே சோம்பலுடன் முடங்கித்தான் விழுபவரை
நாளைவரும் பாரதத்தின் நாயகரே எழுவீரென்போம்!

வாழியசெந் தமிழென்றே வாழ்த்திடுவோம் நெஞ்சார
நாழிகையும் பாராமல் நாமுழைப்போம் துஞ்சாமல்!
தோழியரே கூடுங்கள் துதிப்போம்நம் காந்திமகான்
வாழியநம் பாரதமும் வையகத்தில் தலைநிமிர்ந்தே!

சுதந்திரம் பெற்றிடவே சுகவாழ்வை இழந்தோரில்
கதம்பவன வண்டுகளாய் காலமெல்லாம் போராடி
சுதந்திரமென் பிறப்புரிமை சுட்டெரிப்பேன் உமையென்றே
மதம்ஜாதி வேறுபாடு மறந்தொன்றாய் கொதித்தனரே!

வெள்ளையனை நாட்டைவிட்டு வெளியேற்ற கொதித்தெழுந்த
கள்ளமிலா வீரத்துடன் களமிறங்கி கட்டபொம்மன்
எள்ளளவும் வரிசெலுத்த இயலாதென கொக்கரித்தான்
கொள்ளைவழி நமையாண்ட வெள்ளையனும் வெகுண்டெழுந்தான்!

செக்கிழுத்த சிதம்பரனார் சிம்மக்குரல் வாஞ்சிநாதன்
பக்கபல மாகநின்ற பாரதியார் பகவத்சிங்
கக்கன்முத்து வடுகநாதன் கம்பளத்து நாயக்கனும்
சிக்கவைத்து வெள்ளையனை சிரம்தெறிக்க விரட்டினரே! 

இப்படித்தான் பெற்றுத்தந்தார் இந்தியாவின் சுதந்திரத்தை
சுப்பனுடன் சேர்ந்துஇன்று சொக்கனுமே சுதந்திரத்தை
செப்பவிய லாதசெயல் செய்தனைத்தும் கெடுக்கின்றார்
தப்பிடவே வழிதேடும் தரங்கெட்ட மானிடரே!

பெற்றநந்தம் சுதந்திரத்தை பேணிகாக்க வேண்டாமா
சுற்றமுடன் நச்சனவே சுகவாழ்வு வேண்டாமா
சற்றுமிங்கே சிந்தித்தால் சாதிக்கவும் முடியாதா
உற்றதுணை யாகநின்று உலகநலன் மீட்டெடுப்போம்!

பெற்றதனைப் பேணவேண்டும் பெண்ணடிமை நீங்கவேண்டும்
சுற்றத்தார் எந்நாளும் சுகராகம் பாடவேண்டும்
உற்றபகை நீக்கியாங்கு உயர்நிலையை அடையவேண்டும்
கற்றவர்கள் சத்தியமாய் காந்திமகான் வாழ்கவென்போம்

வெள்ளைக் காரனன்று வீராப்புடன் பாரதத்தை
கள்ளத் தனமாகத்தான் காலமெல்லாம் அடக்கியாள
கொள்ளைக் காரனாக கோட்டையேறி குறிவைத்தான்
உள்ளம் துடிக்குதடா உதடுகளும் வெடிக்குதடா!

சுதந்திரத்தின் மகிமையினை சுத்தமாக அறியாமல்
மதவெறியும் இனவெறியும் மனம்போல கலந்தின்று
உதவாத தீச்செயலால் உபத்திரவம் கொடுக்கின்றார்
மிதவாத மக்களெல்லாம் மிகுதியாய் தவிக்கின்றார்!

பொதுச்சொத்தை அழிக்கின்றார் பொல்லாத காலமிது
இதுநமக்கு வேண்டாமென சொல்பவரோ யாருமிலர்
எதுநமக்கு நல்லதென எடுத்துரைக்க ஆளில்லை
பதுங்கிநின்று பாய்கின்ற புலியாக வாழ்கின்றார்!

செய்நன்றி அறறியாமல் சேட்டைபல புரிகின்றார்
பொய்பேசி பெரும்புகழை ஈட்டிடவே தவிக்கின்றார்
கையிலொரு ஆயுதமே கைகொடுக்கும் எங்கின்றார்
பைநிறைய பணம்சேர்க்கும் பாவிகளே போய்விடுங்கள்! 

நானேதான் உயர்ந்தவன் நாட்டில்நீ தாழ்ந்தோனென
வீணாக வாதம்செய்து வேதம்பல பேசுகின்றார்
தானாக மண்வாரி தன்தலையில் கொட்டுகிறார்
ஏனையா இப்படியென யாருமிங்கு கேட்பாரில்லை

மொழியின் பேராலே மொத்தமாக போராட்டம்
விழிப்புடன் தனக்குரிமை வேண்டுமென சாலைமறியல்
கலிகால பாரத்ததில் காண்பதுவும் இதுதானே
நலிவுற்று தேய்ந்துவிடும் நம்பாரதப் பெருநாடே!

முந்திப்போ என்பதெல்லாம் முட்டாள்கள் வகுத்தவழி
முன்பின்னே யோசித்து முடிவெடுப்பது நல்லவழி
சிந்திப்போம் நன்றாக சிக்கனமே நம்வாழ்வும்
சந்திப்போம் ஒன்றாக சகலநலம் கூடிடவே!

                   (15.8.18)

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...