Tuesday, January 15, 2019

பல்லாண்டு தமிழ்மொழியை பரிதவிக்க விடலாமா


தண்ணீர் பந்தல் அமைத்தால் தாகமதை தீர்க்கலாம் - அங்கே
வெண்ணீர் பந்தல் அமைத்தால் வேடிக்கைதானே பார்ப்பார்!
என்னடா இவன் ஏதேதோ சொல்கிறான் எனத்தோனுதா?
சொன்னால்தான் புரியுமெனில் அதைநான் சொல்லித்தான் ஆகணும்!

மன்னாளும் வேந்தரெலாம் என்செய்தார் எண்ணிப்பார் தமிழா
என்மக்கள் என்நாடு எனதுமொழி என்றேதான் இருந்தார் அன்று
இந்நாளில் நீயிங்கு தமிழனென சொல்கின்றாய் தமிழுக்கு என்னசெய்தாய்?
சொன்னால்தான் புரியும் உன்சேவை யாதென்று எடுத்திங்கே சொல்வாயா?

இப்படிநான் கேட்டால் ஏதும்நீ சொல்ல மாட்டாய் நானறிவேன்
தப்பிக்க முயன்றாலும் தடம்மாறி செல்லவழி விடமாட்டேன் நீயறிவாய் 
துப்பில்லா உன்நாவில் தூயதமிழ் தடுமாறும் நிலைவேண்டாம் - ஒரு
செப்படி வித்தையெல்லாம் செல்லாது இனியெம்மை ஏமாற்ற வேண்டாம் !

பல்லாண்டு வாழ்கவென மணமக்களை வாழ்த்துகிறார் வீட்டில்
தள்ளாத வயதினிலே தம்பெற்றோர் நலம்காக்க துடிக்கின்றார் நாட்டில்
சொல்லாமல் நம்தமிழில் பிறமொழிச்சொல் கலக்கின்றார் என்செய்ய?  
பல்லாண்டு தமிழ்மொழியை பரிதவிக்க விடலாமா படுகுழியில் விழலாமா!

பண்ணாடை யாகமாறி பைந்தமிழின் பெருமைதனை கெடுக்காதே
கண்ணேறு படும்முன்னே காத்திடுவாய் நம்தமிழை கனிவோடு
வின்னோரும் போற்றுகிற வித்தைபல நீசெய்து வாழ்வில்
முன்னேறும் வழிகண்டு முத்தமிழைக் காத்திடலாம் வாதமிழா!

                              (23.9.2018)

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...