Tuesday, January 15, 2019

இயற்கை அழகில் கவர்வது மலையழகே



கண்ணுக்கு இமையழகு கழுத்துக்கு நகையழகு         
    கவிதைக்குப் பொய்யழகு கற்பூரப் புகையழகு!
பெண்ணுக்கு இடையழகு பேச்சுக்கு நாவழகு
    பிறமொழிச்சொல் நீக்கிதமிழ் பின்னிவரும் பாவழகு!
மண்ணுக்கு உரமழகு மன்னனுக்குப் போரழகு             
    மௌனமொழி பேச்சுக்கு மந்திரமே ஓரழகு!
விண்ணுக்குப் பின்னணியாய் விண்மீன்க ளேயழகு
    வெள்ளத்தில் எதிர்நீச்சல் வீரனுக்குப் பேரழகே!

இவையெல்லாம் மிஞ்சுகின்ற இன்னொன்றும் உண்டென்பேன்
    இங்கதையும் சொல்லிடுவேன் இன்முகமாய் கேளுங்கள்!
அவையோரும் ஏற்கின்ற அற்புதமே மலையென்பேன்
     அதிலடங்கும் அம்சங்கள் ஆயிரமே உண்டென்பேன்!
அவையெல்லாம் எவையென்று அடுக்கிடவே நேரமில்லை
     அதையெண்ணி இச்சபையோர் அஞ்சுவதில் சாரமில்லை!     
சிவனோடு பார்வதியும் சிலையாக நின்றாங்கே
     செப்புகின்ற இயற்கைக்கு எழில்சேர்க்கும் மலையழகே!

விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவு
    விண்மீன்கள் தம்மோடு வளம்காணும் பொன்நிலவு! 
கண்ணிமைபோல் காத்திடவே கானகத்தில் மலையழகு
     கல்வெட்டில் சிற்பங்கள் காட்டுவதோர் கலையழகு!
இன்னுமென்ன உண்டெனவே எண்ணித்தான் பாருங்கள்
     ஏற்புடைய சொல்லொன்றை ஏற்கத்தான் வாருங்கள்!
மன்னாளும் வேந்தருக்கு மலையும்ஓர் அரணாகி 
     எந்நாளும் இயற்கைக்கு எழில்கூட்டும் மலையழகே!  
                  (மேலூர் கவியரங்கம்)

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...