Tuesday, January 15, 2019

வீறுகொண்டு எழு – மொழிப்பற்றை வளர்க்க


யாமறிந்த செந்தமிழாம் எந்தமிழ்போல் பாரில்                
     யாரெவரும் கண்டிருந்தால் செப்பிடலாம் நேரில்
தேமதுரம் நம்தமிழோ தெள்ளமுத ஊற்று
     தேவாரப் பண்ணிசைக்கும் நேர்த்தியினைப் போற்று                         பாமரனும் நந்தமிழின் பந்தமதைப் பெற்றான்        
     பாவடிகள் தீட்டுகிற தந்திரமும் கற்றான்             
தாமதமும் ஏன்தமிழா தாவியுடன் வாராய்  
     தண்டமிழைப் போற்றுகிற பற்றினையும் தாராய்!

நானுலகில் ஓர்தமிழன் என்றகுரல் மீண்டும்
    நாண்தொடுத்த வில்லெனஉன் நாபுரள வேண்டும் 
ஏனெனவே கேட்பவர்க்கு எட்டிஉதை தந்து       
    எள்ளிநகை யாடுவோரை கிள்ளிடவே முந்து
மீன்விழியால் சொக்கனையும் சொக்கவைத்த மண்ணில்
    மின்னலென தேன்தமிழை ஏன்மறந்தாய் உன்னில்?  
வீன்பழியை தள்ளிவைத்து வெற்றிநடை போட்டு                                     
    வீரமண்ணில் நம்தமிழ்மேல் பற்றினையும் கூட்டு!     
     
வான்புகழும் வள்ளுவனார் தன்குறளால் இன்றும்
    வளமான இடம்கண்டார் நம்மனதில் என்றும்
கூண்நிமிர்த்தி கொக்கரிக்கும் கொள்கைதனை ஏற்று 
    கொத்தளத்தில் கொஞ்சவல்ல நம்தமிழைப் போற்று                       
தேன்மணக்கும் நந்தமிழோ தன்சுவையில் வானம்
    தென்பொதிகை காற்றிடையே தோன்றுமொரு கானம்
மூன்றெழுத்து மந்திரமாய் நந்தமிழை மாற்று
     மூச்சுவிடும் காற்றோடு முத்தமிழை ஏற்று!
மூன்றுசங்க செந்தமிழாம் நந்தமிழைக் காக்க    
    மொழிப்பற்றை வளர்க்க எழுவாய்நீ வீறுகொண்டே

                                  (26.11.2017)~Melur கவியரங்கம்
(புத்தகத்தில் வெளியானது: பக்கம் 37)

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...