நாமமதி லேதமிழன் நானென்றே கூறுவதும்
நச்சுப்பல் நாவோடு நாரதராய் மாறுவதும்
மாமனாரில் வீட்டினிலே மாதமொன்று தங்குவதும்
மைத்துனனை ஏய்க்கின்ற மௌனமொழி பொங்குவதும்
சாமமதி லேஎழுந்து சாரிகமா பாடுவதும்
சமற்கிருத நச்செழுத்தை சத்தமின்றி நாடுவதும்
பாமணமே இல்லாமல் பாவரிகள் யாப்பதுவும்
பஞ்சமா பாதகத்தில் பங்குபெறும் தீச்செயலே!
தமிழெந்தன் தாயென்றே தாளமிட்டு பாடுகிறாய்
தனைமறந்த தொண்டனாக தண்டமிழைச் சாடுகிறாய்
உமிழ்கின்ற எச்சிலென ஒவ்வாச்சொல் சேர்க்கின்றாய்
ஒச்சமிலா நம்தமிழை ஓய்த்திடவே பார்க்கின்றாய்
குமிழுக்குள் சேர்த்துவைத்த கொத்துமலர் பூச்சரத்தை
கோபுரத்தில் சாத்தாமல் குன்றின்மேல் வீசுகிறாய்
அமிழ்தொத்த நம்மொழியும் அன்னியன்சொல் நட்போடு
அடையாளம் மாற்றுமுந்தன் அற்பச்செயல் வேண்டாமே!
கனித்தமிழாம் நம்தமிழில் கற்கண்டுச் சாறுடனே
கம்பரசமும் சேர்த்தால் காலமெல்லாம் ஓர்நினைவே
இனிக்கின்ற தேன்சுவையாம் இச்சையுடன் நம்தமிழை
இதமாகப் பேசிப்பார் இன்பராகம் பாடிப்பார்
நுனிபுல்லாய்ப் பாராமல் நுட்பமிகு சொற்களையே
இதழோரம் ஏற்றிப்பார் இக்கணமே மெய்யுணர்வாய்
தனித்தமிழை நீமறந்தால் தமிழினமே மாய்ந்துவிடும்
தக்கதொரு நேரமிது தன்மானம் காத்திடவே!
கவியரசர் பாரதியும் கம்பருடன் வள்ளுவரும்
கண்டெடுத்த இம்மண்ணும் காலத்தால் வென்றுவரும்
புவியெங்கும் பேர்சொல்லும் புத்தாக்கம் பெற்றதமிழ்
புகழேணி மேலேறி போரிட்டு வென்றதமிழ்
கவியெழுதும் வல்லமையில் கைதட்டல் பெற்றாலும்
கம்பருடன் பாரதியை கைகூப்பி நிற்பாயே
தெவிட்டாத தெள்ளமுத தீந்தமிழை நீயின்று
தெளிவாக ஆராய்ந்து தேயாமல் காப்பாயே!
(10.12.2017)
(
No comments:
Post a Comment