தமிழென்றால் அமுதென்பார் தரணியிலே மாந்தர்
தனித்தமிழை வளர்ப்பதிலே
தளர்ந்திடாத வேந்தர்
அமுதமெனும் அருஞ்சொற்கள் அடுக்கடுக்காய் உண்டு
அறமென்னும் ஒருசொல்லின்
அரும்பொருளு முண்டு
அமிழாத தமிழ்க்கப்பல் அறிந்தோர்தம் வாக்கில்
அதைமெல்ல கரைசேர்ப்பார்
அவர்தம்நல் நோக்கில்
நிமிடமொரு நிலைபுரள நின்மதியும் தூண்டும்
நித்தமிதை நின்மனதில்
நிலைநிறுத்த வேண்டும்!
பைந்தமிழின் ஏட்டினிலே பல்சுவையு முண்டு
பாமரனின் வீட்டில்தமிழ்;
பாட்டிசைக்கும் வண்டு
ஐந்துவகை நிலவிளக்கம் அருந்தமிழில் கண்டு
ஆர்ப்பரிக்கும்
கடலலையும் அடங்குவது முண்டு
ஐந்தருவி யெனப்பிறக்கும் அருமைமிகு பாக்கள்
அழகுமிளிர் தனித்தமிழின்
அழியாத பூக்கள்
நைந்துபோன துகிலல்ல நந்தமிழின் வாசம்
நாவலரும் பாவலரும்
நாடுகின்ற நேசம்!
இத்தனையும் தமிழுக்கு இயல்பான பண்பாம்
இதைபலரும் உணராமல்
இருப்பவரிங் குண்டாம்
தத்துவங்கள் பலபேசி தமிழ்வாழ்க என்றால்
தமிழிங்கு வளர்ந்திடுமா
தரணியிலே நன்றாய்?
சித்தமதில் பிறமொழியால் நம்தமிழும் நோகும்
சிறகொடிந்த பறவையென
சிதறித்தான் போகும்
நித்தமிதை நினைந்தேதான் நிச்சயமாய் நாளும்
நிறைவாகப் பேசிவர
நின்தமிழும் வாழும்!
(மதுரை காமராசர் பல்கலைக் கழகம் நடத்தும் சர்வதேச கவிதைப் போட்டிக்கு அனுப்பியது)
No comments:
Post a Comment