நாடுபோற போக்கினிலே நல்லவர்கள் யாருமில்லை
நல்லவர்கள் இல்லையெனில் நட்புகொள்ளும் பேருமில்லை
பீடுநடை போடுகின்ற பிள்ளைகளும் மாறவில்லை
பிள்ளைகளால் தாயுணர்வில் பெற்றமனம் ஆறவில்லை
பாடுபடும் மானிடர்க்கு பட்டதுயர் தான்நிறையும்
பற்றுவைத்த செல்வமெலாம் பத்துநாளி லேமறையும்
நீடுபுகழ் நேர்வழியும் நீதிவழு வாநெறியும்
நீயுறையும் பூமியிலே நீங்கிவிட்ட தேமிகவே!!
இங்கிதற்கோர் தீர்வினையும் ஈந்திடுமோர் ஆட்சியில்லை
இன்னலெலாம் போக்கிநலம் ஈட்டுகிற மாட்சியில்லை
சங்கறுப்ப தெம்குலமே சங்கரனார்க் கேதுகுலம்
சாதியினைத் தூண்டுமிந்த சங்கதியால் ஏதுநலம்?
எங்களுக்கும் காலமுண்டு என்றுசொல்லும் நாள்வருமா?
இந்தவழி நல்லவழி என்றுரைக்க நாவருமா?
சுங்கவரிச் சாவடியில் சோதிக்கும் சோதனையாய்
சுட்டெரிக்கும் சட்டமதை சுற்றிவிட்டால் வேதனையே!
இங்கிதமாய் நீதிநெறி ஏடுகளைத் தேடுகிறேன்
எந்தவழி யாயினுமோர் ஏற்றமதை நாடுகிறேன்
மங்கிடாத வெண்நிலவில் மானிடராய் பூத்திருப்போம்
மன்னவராய் இவ்வுலகில் மாசறுத்து காத்திருப்போம்
திங்களொரு நீதிவழி தீர்க்கமிகு சூத்திரமாய்
தின்னமுடன் எம்நலத்தைத் தேற்றுவதும் சாத்தியமே!
பங்கமிலா நீதிவழி பாமரனும் சாற்றிடுவான்
பாங்குடனே நாமதையும் பந்தமுடன் போற்றுவமே!!
No comments:
Post a Comment