Tuesday, January 15, 2019

தமிழ்த்தாயை மதித்தெழுந்து தலைவணங்க மறுத்தமர்ந்தார் சமற்கிருத எழுத்துன்றன் சிறந்ததமிழ் மொழிக்கெதற்கு


தமிழ்த்தாயை மதிக்காதான் தலைவாசல் மிதிக்காதே
செமிக்காமல் சிறிதுணவும் சிறுவயிற்றில் அடைக்காதே
உமிக்குள்ளே ஒளிந்திருக்கும் ஓரரிசி மறுக்காதே
நமக்கென்றும் வளம்சேர்க்கும் நற்றமிழை மறக்காதே! 
 
நானென்றும் நல்லதமிழ் நாடுகின்ற தமிழனென்றும்
வீண்வாதம் செய்கின்றார் வேற்றுமொழி போற்றுகிறார்
ஏனென்றும் எதற்கென்றும் எடுத்தியம்ப மறுக்கின்றார்
தான்தோன்றித் தனமாக தனித்தமிழை வெறுக்கின்றார்!

கோவில்குளம் கொத்தளத்தில் கோவிந்தா எனச்சொல்லி
நாவினிலே நச்சுமொழி நடனமிட இடங்கொடுத்து
தேவியவள் நொம்பலத்தை தேற்றிவிட யாருளரோ?
தூவிமலர் பொற்பாதம் தொட்டுவிடை தேடுகிறேன்!

ஓடுகின்ற நதிகளிலே உதவாசில நதிகளுண்டு
நாடுகின்ற மொழிகளிலே நச்சுமிகு மொழிகளுண்டு
பீடுநடை போடுகின்ற பெருமையெலாம் தமிழுக்கே
சாடுகிறேன் சதிதீட்டும் சமற்கிருத மொழியதனை!

தேடுகின்ற செல்வமெல்லாம் தேயாமல் நிலைக்காது
பாடுபடும் பாட்டாளி பசியென்றும் மறையாது
ஊடுபயி ராய்புகுந்து உள்வேலை செய்கின்ற
மூடுமந்தி ரம்மெல்லாம் முத்தமிழுக் காகாது!

இவையெல்லாம் நீயுணர்ந்தால் இசைவோடு தமிழ்வாழும்
அவைதன்னில் உன்தமிழும் அயராமல் நடமாடும்
சுவையான என்சொல்லை சூத்திரமாய் நீயேற்றால்
எவருன்னை எதிர்த்தாலும் எதிர்காலம் உனக்கேதான்!


29.4.2018


No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...