தமிழகத்தில் தமிழ்முழக்கம் தமிழாய் இல்லை
தனித்தமிழின் புறக்கணிப்போ தருதே தொல்லை
உமியென்றே ஒதுக்கிவைத்த உதவாச் சொற்கள்
உனைக்கெடுத்து எனைக்கெடுக்க உருளும் கற்கள்
இமியளவு நொடிப்பொழுதில் எதையோ விண்டாய்
இச்சையுடன் பிறமொழியை இடையே கண்டாய்
திமிரடக்கும் தோள்வலிமை தேய்தல் ஆச்சு
தித்திக்கும் தமிழின்று திரிந்தே போச்சு!
மூச்சுக்கு முன்னூறு முழக்கம் உண்டு
முத்தமிழின் வாசணையோ முறிந்த தண்டு
பேச்சுக்கு பேச்சிடையே பீற்றல் கண்டேன்
பெற்றபுகழ் காக்கின்ற பேர்தான் காணேன்
வீச்சுமொழி பேச்சுமொழி வெளியில் தானோ
வெட்கமின்றி வீண்பகட்டில் வேடம் ஏனோ
பூச்சாண்டி காட்டுகின்ற போக்கை மாற்று
பூவுலகில் தமிழ்சாற்றும் புலமை போற்று!
அமுதமொழி நம்தமிழே என்றே சொன்னாய்
அரவமின்றி அயல்மொழியை அணைத்தே நின்றாய்!
குமுதமலர்க் கொத்தாகக் குளத்தில் கண்டாய்
கொய்துவந்து வீதியிலே கொட்டித் தீர்த்தாய்
எமதர்மன் வேடத்தை எட்டித் தள்ளி
ஏற்றமிகு இன்றமிழை எடுத்துச் சொல்லி
கமுகுமர வலிமைமிகு தமிழை இங்கே
கண்டபடி உளராமல் காப்போம் நன்கே!
(24.6.18)
No comments:
Post a Comment