Tuesday, January 15, 2019

தமிழ்ச் சங்கம்


சங்கத்தமிழ் மூன்றாலே சரித்திரத்தில் இடம்கண்டு 
தங்கமன மன்னரெலாம் தமிழ்வளர்த்த காலம்அன்று!
பங்கமிலா மரபுவழி பாக்களையும் படைத்தின்று
சிங்கமென பாவலர்கள் சிளிர்க்கின்ற காலமிதே!   

வங்கக்கடல் பொங்கிமிக வளம்கூட்ட அந்நாளில்
அங்கமுறு புலவர்கள் ஆற்றினரே தமிழ்த்தொண்டு!
தங்கம்பொன் பரிசுகளும் தாம்பெற்ற மகிழ்ச்சியிலே 
இங்கவர்தம் தொண்டாலே இனியதமிழ் வளர்ந்ததுவே! 

முதல்மூன்று சங்கமதில் மூத்தறிவுப் புலவர்களாய்
மதவேறு பாடின்றி மாச்சரியம் ஏதுமின்றி
இதமாக இன்றமிழில் இலக்கியப் படைப்புகளை
பதமாகப் படைத்திடவே பைந்தமிழும் வாழ்ந்திடுதே!

இச்சங்கம் மூன்றோடு இடைநிற்றல் கொடுமையென 
கச்சிதமாய் நான்கென்று கவிப்புலமை தனைக்காட்ட
மெச்சிடவே பாண்டித்துரை மன்னவனும் புறப்பட்டான்
இச்சையுடன் தொடங்கியது இருபதாம் நூற்றாண்டே!

இரண்டாயிரத் தீரெட்டில் எழிழ்மிகு கட்டிடத்தை
முரண்படாது திறந்திட்டார் முதல்வர்செய லலிதாவே!
தரமுடனே நிகழ்வுபல தினமரங்கில் நிழ்ந்திடவே
வரம்பெற்று வளமையுடன் வளர்கிறது தமிழின்றே!

வாழ்கபல் லாண்டென்று வாழ்த்துபெறும் தமிழ்ச்சங்கம்
ஆழ்கடலில் முத்தெடுக்கும் ஆய்வுகளாய் தமிழ்வாழ
ஊழ்வினையென் றெண்ணாமல் உளமாற உழைக்கின்றார்
சூழ்கவே சுகவாழ்வும் சூழுரைத்து தமிழ்காப்போம்!  

 (13.6.’18)

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...