தமிழ்மக்கள்
வாழுமிடம் தமிழ்நாடு என்றே
தாமழைக்க வேண்டுமென தவித்திட்டார் அன்றே
அமிழ்தமென
சுவைக்கின்ற அழகுதமிழ் அண்ணா
அறுபத்தி எட்டினிலப் பெயர்சூட்டச் சொன்னார்
குமுதமலர்
மலர்ந்ததென கோலோச்சி நின்றார்
கொற்றவனாய் தமிழ்நாட்டின் கொடிநாட்டி வென்றார்
இமியளவு
நமக்கிருந்த ஏக்கமதை வென்றோம்
இன்பமழை பொழிகின்ற இருமாப்பில் நின்றோம்!
சென்னையெனச்
சொல்லிவந்த சின்னமொழி மாற்றம்
அன்னைதமிழ் புகழ்பாடும் அத்தனையும் தோற்றம்
சொன்னபடி
ஒன்றாக சூளுரைத்துக் கொண்டோம்
சொன்னபடி தமிழ்நாடு சுடர்விடவே கண்டோம்
திண்ணையிலும்
அன்றுமுதல் தேன்தமிழில் பேச்சு
திக்கெட்டும் பரவியது திராவிடத்தின் வீச்சு
அன்னைதமிழ்
தோன்றியநாள் யாரறிவார் இங்கே
ஆயிரம்ஈ ராயிரமென் றறைவதுநம் பங்கே!
வயதாலே
மூத்தமொழி வையகமே போற்றும்
வள்ளுவரின் குறளொன்றே வளமொன்றை சாற்றும்
தயவேதும்
பாராமல் தண்டமிழின் தோற்றம்
தரணியிலே யார்கணிப்பார் தமிழனுக்கே ஏற்றம்
பயமேதும்
இனியில்லை பைந்தமிழைப் போற்றி
பாரிணிலே வீறுநடை போட்டிடலாம் மாற்றி
அயராது
தமிழ்வாழ அனைவருமே ஒன்றாய்
அன்னைதமிழ் வளம்காத்து அறம்காப்போம் நன்றே! (26.8.2018)
No comments:
Post a Comment