ஆதியிலே
பிறந்தமொழி அனைவரையும் கவர்ந்தமொழி
வீதியிலே
நடமாடும் விளையாட்டுப் பிள்ளைமொழி
பாதியிலே
வந்ததல்ல பாரெங்கும் தமிழ்மொழியே
மேதினியில்
இதன்சிறப்பை மெய்ப்பிக்க வேண்டாமா?
நாவினிலே
நல்லதமிழ் நர்த்தனமே ஆடவேண்டும்
கோவிலிலே
நற்றமிழில் கொஞ்சநேரம் பாடவேண்டும்
தேவியவள்
வாசலிலே தேனாறு ஓடவேண்டும்
காவியத்தில்
கனித்தமிழில் கவிதைகளும் பாடவேண்டும்!
இலக்கியத்தில்
வளம்பெற்று எழுச்சிகண்ட நம்தமிழை
இலக்கணத்தின்
வரம்புகளை எடுத்தியம்பி ஏற்றமுடன்
கலப்படமே
இல்லாத கனித்தமிழை மிடுக்குடனே
களத்தினிலே
இறக்கித்தான் கட்டமைப்பு காத்திடலாம்!
எத்தனையோ
சிறப்புகளை எடுத்தியம்ப விழைந்தாலும்
அத்தனையும்
எடுத்திங்கே அடுக்கிவைக்க நேரமில்லை
பெத்தமனம்
பித்தென்பார் பிள்ளைமனம் கல்லென்பார்
இத்தரையில்
நீஅயர்ந்தால் எப்படித்தான் தமிழ்வாழும்?
பட்டிதொட்டி
எல்லாமே பைந்தமிழின் பரிணாமம்
விட்டகுறை
தொட்டகுறை வேறறுத்து நிலைக்கின்ற
கட்டமைப்பு
தமிழ்மொழியின் கவசத்தை உடைக்காதே
குட்டையினில்
மீன்பிடிக்க குளத்தினையே கலக்காதே!
No comments:
Post a Comment