Tuesday, January 15, 2019

சந்தனமாரிக்கு திருவிளக்கு பூஜை



ஆயிரம் தானங்கள் அளவின்றி செய்தாலும்
பாயிரம் தன்னோடு பாமாலை சாற்றிவந்தால்
தாயிடம் பொங்குமோர் தடையில்லா அன்பென்று
நீயிதை உணர்ந்தாலே நினைவெல்லாம் நலம்பெறுமே!

பங்குனி மாதத்திலே பலவிரதம் தானிருந்து
சுங்கடிச் சேலைகட்டி சுகமொன்றை நாம்கண்டு
கிங்கினி மணிகோர்த்த கொலுசிரண்டை காலிலேற்றி
தங்கமனத் தாயேவுன் தலைவாசல் தேடிவந்தோம்!

சித்திரை முழுநிலவே சிந்தையெல்லாம் உன்நினைவே
பத்தரை மாற்றுத்தங்க மேணியுந்தன் பளிச்சிடுதே!
நித்திரை கொண்டாலும் நின்முகமே என்கனவில்
எத்தனை கவிதொடுத்து ஏப்படித்தான் பாடுவதோ?  

வைகாசி மாதத்திலே வைத்திடவே குடமுழுக்கு
தொய்வாகிப் போகாமல் தோள்கொடுத்து துணையாகி
கைமேலே நீயெமக்கு கருணைமழை பொழிவாயா?
மைவிழித் தாயேவுன் மகிமையே மலரட்டும்!

சந்தன மாரியென்று சனமெல்லாம் உனையழைத்தார்
சிந்தனை செய்கையிலே சிறியதோர் கேள்வியிங்கே!
சந்தனம் பூசியதால் உன்மேணி மணக்கிறதா - இல்லை
சந்தன வாசமேவுன் மேணியிலே பிறக்கிறதா?  

தொந்திக் கணபதி துணையிருக்கு துயர்நீங்க
சிந்தித்துப் பார்த்தாலே சிளிர்க்குதடி மேணியெல்லாம்
நந்திக் காளையுமே நடுவாசல் காக்கிறது
எந்தக் காரியாமும் இடரின்றி நடந்தேறும்!  

சந்தனப் பொட்டுவைத்து சாதிமல்லி பூச்சொரிந்து
தந்தனத் தாளத்துடன் தங்கமேனி மாரியுன்முன்
செந்தனல் தீச்சட்டி சேர்ந்திங்கே கூடுதம்மா
சிந்தனை யெல்லாமே சிறகடித்து பறக்குதம்மா!

ஊரெல்லாம் உன்பேச்சே உள்ளமெல்லாம் உன்நினைவே
பாரெல்லாம் உன்புகழை பாடித்தான் மகிழுதம்மா!
யாரென்ன சொன்னாலும் எல்லாமே நீதானம்மா
கார்முகில் வண்ணமுந்தன் கருங்கூந்தல் கவருதம்மா!

ஒருவிளக்கு போதாதென ஊரெல்லாம் திரண்டிங்கே
திருவிளக்கு பூசையொன்றை திரண்டிங்கே செய்கின்றார்!
அருகமர்ந்து பார்ப்போர்க்கு அதிசயமே மிஞ்சுதம்மா
திருவாசல் திறந்துந்தன் திருவருளைக் காட்டுவாயே!

திருவிளக்கு பூசையிலே திருமகளின் வாசமிங்கே
தெருவெல்லாம் பூக்கோலம் திண்ணையிலே மாக்கோலம்!
வருவோரை வரவேற்க வாசமல்லி தேர்க்கோலம்
கருவொன்றை உருவேற்றி கைகூப்பி வணங்குகிறோம்!

அருமைசந் தனமாரி அங்கமெல்லாம் மணக்குதம்மா
பெருமையுடன் கூடியுந்தன் பேர்சொல்லி பாடுகிறோம்!
உருமாரி எமையின்று ஒருகணமே பாருமம்மா
திருவான உன்நாமம் தேனாய்செவி பாயுதம்மா!

திருமாரி அன்னையுனை தீந்தமிழில் பாடிடவே
உருவாகும் எண்ணமதில் உன்பேர்தான் ஒலிக்குதம்மா!
தருவாயுன் ஓர்குரலை தருணமதில் நான்வருவேன்
திருவாயால் பாடியுந்தன் திருநாமம் போற்றுகிறேன்!

சந்தனமாய் நீமணக்க சகலவரம் தாருமம்மா
சொந்தமினி நீதானே சொல்வதெலாம் உண்மையம்மா!
இந்தநாளில் எமைநீயும் எட்டிநின்று பாருமம்மா
முந்தியிலே முத்தாக முழுநிலவாய் வாருமம்மா!

தந்திரம் ஏதுமில்லை தலைவணங்கி நாடுகிறோம்
மந்திரம் பலசொல்லி மனமுருகி கூடுகிறோம்!
சுந்தர வதனமதை சூளுரைத்து பாடுகிறோம்
விந்தைபல புரிந்திடவே விரைந்திங்கே வாருமம்மா! 

தந்தனத்தோம் தாளத்துடன் தாவியே வாருமம்மா
சொந்தங்கள் ஆயிரமாய் சூழ்ந்துன்னைப் பாடுகிறோம்!
பந்தமுடன் உன்நாமம் பாடித்தான் மகிழ்ந்தோமே
சந்தமிகு கவிபாடி சக்தியுனைப் போற்றுகிறோம்!

குங்குமப் பொட்டுக்காரி குலம்காக்கும் சொந்தக்காரி
மங்கலம் பொங்கிடவே மழையாகப் பொழிந்திடம்மா!
செங்கதிர்ச் சூரியனாய் செந்தமிழின் வாசம்மிக
பொங்கிடும் பானையிலுன் புன்சிரிப்பே காணுதம்மா!

தென்னையோலை பந்தலில்உன் திருநாமம் ஒலிக்குதம்மா
புன்னைவனச் சோலையெல்லாம் புதுவாசம் பிறக்குதம்மா!
அன்னையுனைத் துதிப்போர்க்கு அள்ளிவரம் தாருமம்மா
சொன்னபடி நடந்துமனம் சுழிநடனம் ஆடுதம்மா!

சொல்லில்நீ அலங்காரி சுகவாழ்வின் ஓங்காரி
கல்லிலும் ஒளிர்கின்ற கருணைமிகு மகமாயி!
வில்லிலோர் அம்பெனவே விரைந்தோடி வாருமம்மா
சொல்லுமென் கவிவரிகள் சுகமென்றே சொல்லிடுவாய்!

சந்தனக் காப்பிலேஉன் சுகவாசம் வீசுதம்மா
வந்தனம் சொல்பவரின் வாயெல்லாம் மணக்குதம்மா!
நிந்தனை செய்பவரை நின்வழியில் பாருமம்மா
முந்தியை ஏந்துகிறேன் மடிப்பிச்சை தாருமம்மா!         

பூமியும் வறண்டிங்கே பூந்தணலாய் காயுதம்மா
சாமியும் இல்லையென்றே சாதனையாய் பேசிசிலர்
ஓமெனச் சொல்லியுன்னை ஒளிமறைவில் பாடுகின்றார்
காமதேனு பசுவாக கருணைமழை பொழிந்திடம்மா!
           
மாரியுன்னைப் துதிக்கையிலென் மனம்துள்ளி ஆடுதம்மா
கர்முகிலின் கருணையுந்தன் கண்ணசைப்பில் கனியுதம்மா!  
நீரினிலே தவழ்ந்துவரும் நீர்க்குமிழி நீதானம்மா
ஊரெல்லாம் உன்கோவில் வாசலிலே நிற்குதம்மா!

ஆதியிலே உனைப்பாட அங்கமெலாம் துடிக்குதம்மா
பாதியிலே ஓடுகிற பக்தர்களும் இங்கில்லை!
வீதியெல்லாம் ஒளிர்கின்ற விளக்கேற்றி துதிக்கின்றார்
மேதினியில் மக்களெல்லாம் மகிழ்ந்திடநீ அருள்வாயே!

தங்கநிற உன்மேணி தகிப்பதுமோர் அற்புதமே!
அங்கமது மினுமினுக்கும் அதிசயமும் எப்படிம்மா?
சங்குதனில் பால்வார்த்து சன்னிதியில் எனகளித்து
பொங்குகிற கருணையுடன் புதுவாழ்வு தருவாயே!

மலர்சாத்தி உனையின்று மனமுருகி பாடுகிறோம்
நலம்காக்கும் உன்முகத்தை நாளெல்லாம் தேடுகிறோம்!
பலர்போற்றும் பதிகத்தால் பக்தியுடன் பாடுகிறோம்
குலம்ஓங்க எந்நாளும் கோவில்முன்பு கூடுகிறோம்!
           
ஊர்செழிக்க வேண்டுமம்மா ஊர்மக்கள் துதிக்கின்றார்
பார்செழிக்க வேண்டுமம்மா பக்திவலம் வருகின்றார்!
யார்மனமும் நோகாமல் யாகபூஜை தருகின்றார்
தேரில்வலம் நீவந்து திக்கெட்டும் அருள்வாயே!

சங்கினிலே பால்நிரப்பி சந்தனத்தால் ஆராதணை
தங்கநிற பொன்மேணி தாய்க்கின்று தீபஒளி!
செங்கதிரோன் ஒளிபாய்ச்ச செழிக்கட்டும் இவ்வூரே
மங்கலமே பாடுகிறேன் மறவாமல் வரமருள்வாய்!

வருவாயே அருள்வாயே வரமெல்லாம் தருவாயே
திருவாயால் உனைப்பாட தினமேநான் வருவேனே!
தருவாயே சுகவாழ்வு தனையென்றும் குறையாமல்
கருவாகி இருள்போக்கும் அருளீவாய் நிறைவாக!

No comments:

Post a Comment

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...