வழக்கிழந்து வரும்மொழிகள் வரிசையிலே தமிழ்வருது
கிழக்குதிக்கும் கதிரவனின் கீற்றொளியும் மறைகிறது
புழக்கமிலா பிறமொழிச்சொல் புகுந்துநமை அழிக்கிறது
பழக்கத்தை மாற்றிடுவாய் பைந்தமிழைக் காத்திடவே!
இக்கருத்தை ஐநாவும் எச்சரிக்கை யாய்தருது
தக்கதொரு தருணமினி தனித்திங்கே வாராது!
சிக்கியதோர் வளையறுத்த சிறுத்தையெனப் புறப்பட்டு
இக்கணமே கொதித்தெழுவாய் இனியதமிழ் காத்திடவே!
தமிழெங்கள் உயிரென்றும் தனித்தமிழெம் புகழென்றும்
திமிரோடு தினமுலகில் திசையெட்டும் பாடுகின்றாய்!
இமியேனும் தமிழ்காக்க என்செய்தாய் சொல்தமிழா
உமியென்றே உனைத்தூற்றும் ஒருசொல்லும் வேண்டாமே!
நாமமதில் நற்றமிழும் நாவினிலே பிறமொழியும்
சாமமதில் சலனமின்றி சமக்கிருத மொழிக்கலப்பும்
தேமதுரத் தமிழோய்க்கும் திருட்டுவிழி பார்வையுடன்
பாமரனை இவ்வுலகில் பரிதவிக்கச் செய்வதேனோ?
எல்லாமே நீயானாய் ஏச்சிக்களை நாயானாய்
சொல்லாமல் பிறமொழியில் சுகராகம் பாடுகிறாய்
கல்லாதவன் காதினிலே கசப்புமொழி ஏற்றுகிறாய்
பொல்லாத உன்செயலால் புலம்பிடுதே தமிழினமே!
இப்படித்தான் படிப்படியாய் இன்றமிழைப் புறந்தள்ளி
செப்படிவித் தைகாட்டும் செயலினியும் வேண்டாமே!
தப்பெல்லாம் உன்மேல்தான் தமிழ்வழக்கில் தேய்கிறது
அப்பட்ட உண்மையிதை ஐநாவும் சொன்னதுவே!
முனைவர்
இரா, வரதராசன்
29.4.2018
No comments:
Post a Comment