எங்கெங்கும்
தமிழென்றே மாற்றம் கண்டால்
எந்நாளும் தமிழனுக்கோர் ஏற்றம் உண்டாம்
இங்கெவர்க்கும்
தமிழ்காக்க தயக்கம் தோன்றின்
இல்லாத துயரோடு மயக்கம் காண்பார்
செங்கரும்புச்
சாரெனவே தமிழை அன்று
சேரசோழ பாண்டியர்கள் சுவைத்தார் நன்று
பங்கமிலா
நம்தமிழின் பெருமை சேர்ப்பும்
பைந்தமிழின் நிறைகாக்கும் அருமை வாய்ப்பே!
எங்கதமிழ்
எங்கதமிழ் எனவே நாளும்
எட்டப்பன் மொழிபேச தமிழே நோகும்
தங்கமனம்
குரங்காகி தளர்வும் கண்டு
தறிகெட்டு புலம்புகிற பலரிங் குண்டு
மன்றத்தில்
பிறமொழிச்சொல் தவிர்த்த தில்லை
மதிகெட்ட மாந்தரிங்கு திருந்த வில்லை
குன்றத்தில்
ஏற்றிவைத்த விளக்காய் நின்று
குணமாக நந்தமிழைக் காத்தல் நன்றே!
எங்களுக்கும்
காலமுண்டு என்றே நாளும்
ஏற்றமுடன் போற்றதமிழ் நன்றே வாழும்
எங்கெங்கும்
தமிழொன்றே நாட்டில் இன்றும்
ஏட்டினிலே படைத்திடலாம் பாட்டில் என்றும்
சங்கருப்ப
தெம்தொழிலே சிவனார்க் கேதாம்
சபையில்நக் கீரனன்று பதமாய்க் கேட்டார்
இங்கிதமாய்
வாதாடி வென்றார் அன்றே
எம்பெருமான் சிவனருளைப் பெற்றார் நன்றே!
துக்கத்தில்
துணைகாக்கும் தமிழின் தொன்மை
துயரத்தில் வழிகாட்டும் எதிலும் மெண்மை
தெக்கத்திச்
சீமையிலே திகட்டும் வெல்லம்
தென்பாண்டி நாட்டினிலே பகட்டின் செல்லம்
தக்கத்திமி
தாளமிடும் இசையின் வெள்ளம்
தரமில்லா மொழிபோற்றின் தோன்றும் பள்ளம்
சிக்கித்த
விக்காமல் தமிழைக் காக்க
சிறப்பான இடம்காணும் தமிழன் போக்கே!
No comments:
Post a Comment