Tuesday, August 22, 2017

தமிழ்மொழியின் முகவரிநம் தமிழ் எழுத்தா கிரந்தெழுத்தா?.....(2) => 25.6.2017




தமிழ்மொழி முகவரி எதுவெனக் கேட்டால் 
   தனித்தமிழ் எழுத்தெனில் தமிழினி வாழும்
அமிழ்தெனும் தமிழ்மணம் அறிந்தவன் நீயோ 
   அதிலொரு கிரெந்தெழுத் தினையிடல் ஏனோ? 
திமிருடன் கிரந்தெழுத் தினையுடன் சேர்த்து
    திடமனம் இழந்திடும் திருப்பமும் கண்டாய்
உமியுனுள் அரிசியும் உறங்கிடு மென்றே
    ஒதுக்கிடும் தகுதியில் உமிதனை உண்டாய் 

இனிமையில் தனித்தமிழ் எழுத்துடன் சொற்கள்
      இசைவுடன் குறையற இருப்பது உண்மை
தனிமையில் வலிமையும் தனக்கெனப் பெற்று
      தரமதை உயர்த்திடும் தமிழெழுத் தொன்றே
துணிவுடன் கிரந்தெழுத் தினையதில் சேர்த்து 
      துணையதைத் தழுவிடும் துயரமும் ஏனோ?
கனிவுடன் நிதமொரு கருப்பொருள் மாற்றி 
      கனித்தமிழ் வளமதில் கலப்படம் தானோ?

தடையிலும் நிறைகுளம் தவழ்ந்திடும் நீரின்
   தகவினை மறந்துடன் ஜலமெனக் கூறி        
இடையினி லியல்பினை ஸகஜமென் றோதி    
     இழிவுடன் திருமதி ஸிரீயென மாற்றி              
படையது நடுங்கிடும் விடமிகு பாம்பின்      
   பெயரினில் கிரந்தெழுத் தினையிடல் வேண்டாம்
விடைகொடு அதையினி விரும்பிடல் கேடே
   விரைந்தொரு இழிநிலை விடுவது மேலாம்
                 &&&
25.6.2017 (கண்ணதாசன் நினைவுநாள்) 

தமிழ்மொழியின் முகவரிநம் தமிழ் எழுத்தா கிரந்தெழுத்தா?........(1) => 25.6.2017



     
தமிழ்மொழியின் முகவரிநம் தமிழெழுத்தா - இல்லை
   தடம்புரண்டு நமைவதைக்கும் கிரந்தெழுத்தா என்பேன்
அமிழ்தமெனும் தமிழ்ச்சொற்கள் ஆயிரமிங் குண்டு
   அவைமறந்து கிரெந்தெழுத்து அரவணைப்பு மிங்கேன்? 
உமியதனுள் ஓரரிசி உறங்குதெனச் சொல்லி
    உதவாத உமிதன்னை உண்பதுவும் ஏனோ? 
திமிருடனே நமக்கெதிராய் தீங்கிழைக்கும் வேளை
    திடமான நடவடிக்கை திசைமாறல் தானோ?

இனிமையிலும் தெளிவதனை இயம்பிடுமின் சொற்கள்
      எந்தமிழி லிருப்பதுவும் ஏராள மென்பேன்
தனிமையிலும் வலிமையுடன் தனித்தியங்கி நாளும்
      தன்மானம் காப்பதுவே தமிழ்மொழியின் பண்பே
துணிவுடனே கிரந்தெழுத்தின் தோழமையும் சேர்த்து 
      துன்பத்தை விலைபேசி தூக்கம்கெடல் தானோ?
கனிவின்றி இதழோரம் கருப்பொருளை மாற்றி 
      கன்னித்தமிழ் சொல்லதிலே கலப்படமு மேனோ?

தடையின்றி தண்ணீரில் தவழ்கின்ற பூவை
     தடைசெய்து ஜலம்நீந்தும் புஷ்பமெனக் கூறி
இடையிடையே கஷ்டமென்றும் இஷ்டமென்றும் சொல்லி
     இல்லத்தாள் திருமதியும் ஸ்ரீமதியாய் மாறி
உடைகழற்றும் நாகமொன்றை ஸர்ப்பமெனும் போது  
   அடிவயிறு கலங்குமொரு அவலநிலை தானாம்
விடைகொடடா அதையினிநீ விரும்புதலும் கேடே
   விலகியந்த இழிநிலையும் விடுவதுதான் மேலாம்.
                       &&&

(கண்ணதாசன் நினைவுநாள்)

நயத்தக்க நாகரிகம் வேண்டுபவர் => 12.6.2017



நயத்தக்க நாகரிகம் நாடுபவர் யாரெனவே            
   நாலிருவர் மத்தியிலே நான்துணிந்து சொல்வேன்           
தயக்கமதைத் தள்ளிவைத்து தாள்பணிந்து நன்குணர்ந்து
   தக்கதொரு சொல்விளக்கம் தந்தெதையும் வெல்வேன்
மயக்கத்தி லேதுவண்டு மண்தரைமீ தேபுரண்டு
   மாற்றுமொழி சொல்பகரும் மாந்தரையும் பார்ப்பேன் 
வியப்பேதும் காட்டிடவோ வீண்மொழியும் கூட்டிடவோ
   விளங்குமொரு சொல்பகர்ந்து வித்தைவழி ஈர்ப்பேன்

நயமென்னும் சொல்லதனை நட்புயெனச் செப்புவதில்
   நம்பிவரும் மாந்தருடன் நட்புமழை கூடும்    
சுயமென்னும் சிந்தனையில் சுத்தநெறி நட்புறவும்
    சூசகமாய் தன்வழியில் சுற்றிவர நாடும்  
தயவேதும் பாராமல் தான்வெறுக்கும் நஞ்சினையும் 
    தட்டிடுமோர் எண்ணமின்றி தான்விரும்பி ஏற்பார்    
உயர்வான இக்கருத்தை ஊரறிய ஈரடியில் 
          உள்ளபடி வள்ளுவர்சொல் உண்மையெனப் பார்ப்பார்.

பிறர்நோக புண்படாமல் பிஞ்சுமனம் வாடிடாமல்
    பக்குவமாய் சொல்பகரும் பண்பெனவும் சொல்வார் 
அறமென்னும் நல்வழியில் அன்புமொழி தான்பகர்ந்து
    அங்குசமாய் நின்றுபிறர் அன்பினையும் வெல்வார்
புறமேதான் நேர்மையென்றும் பக்திநீதி நுட்பமென்றும்
    பொங்கிவரும் கோபமதை போக்குவதும் என்பார்
திறந்தாங்கே பொன்மனதால் தீயவழி செல்பவரை
    திக்கறியும் சொல்பகர்ந்து தேர்ந்தவழி காண்பார்
                    &&& 
குறிப்பு: 12.6.2017 அன்று நெல்லை குமாரகபிலன் இலக்கிய அறக்கட்டளைக்கு அனுப்பபட்ட போட்டிக் கவிதை

தேமதுரத் தமிழோசை => 18.5.2017


யாமறிந்த மொழிகளிலே தமிழ்போல் பாரில்                       
     யாரெவரும் கண்டதில்லை காணேன் நேரில்           
தேமதுரத் தமிழென்றால் சுவையில் தேனாம்            
     தித்திக்கும் சொற்களையும் மறந்த தேனாம்?            
பாமரனும் நந்தமிழை எளிதாய்க் கற்றான்
     பாவரிகள் படைக்குமோர் திறனும் பெற்றான்
தாமதமும் இனிவேண்டாம் தமிழா வாராய்
     தரம்கெட்ட பிறமொழிச்சொல் தடுப்போம் நேராய்.
    
வான்புகழும் வள்ளுவனார் குறளால் இன்றும்
     வளமான இடம்கண்டார் நம்மில் என்றும்
நான்வியக்கும் தொட்டிற்பா தமிழில் உண்டு
    தயக்கமும் ஏனம்மா பிறரைக் கண்டு?  
தேன்மணக்கும் நந்தமிழோ சுவையில் வானம்     
     தேவாரம் திருப்புகழில் பிறக்கும் கானம்
கோனென்றும் குடியென்றும் வேண்டாம் பேதம்
    கோவிலிலே முழங்கட்டும் தமிழில் வேதம்
    .
தேமதுரத் தமிழோசை தேடிச் செல்வோம்  
     தெருவெல்லாம் அதன்புகழை பாடிச் சொல்வோம்
பாமணக்கும் நல்லவரி பாடல் வேண்டும் 
     பண்பாட்டில் தமிழன்புகழ் தேடல் வேண்டும்
நாமமதில் நம்மதிப்பை உயர்த்த நன்று
     நல்வாக்கு இலக்கியங்கள் படைப்போம் இன்று.
மாமதுரை கவிஞர்பே ரவையும் இன்று 
     மன்றத்தில் தமிழ்போற்றும் வகையும் நன்று.
                       &&&      
குறிப்பு: 18.5.2017 அன்று மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் படைக்கப்பட்டது

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...