Tuesday, January 15, 2019

நெகிழிகளால் நிலம்கெடுமே கிரந்தெழுத்தால் தமிழ்கெடுமே


நெகிழிக் காகிதங்கள் நிறையவே பயன்படுத்தி
அகிலத்திற் குணவளிக்கும் அருமைமிகு நிலங்களின்று
துகிலுரித்த உடலாகி தூய்மையெல்லாம் பறந்ததினால்
மகிழத்தான் முடியலையே மாற்றுவழி என்னமச்சான்?

சரியாகச் சொல்லிவிட்டாய் சற்றுகொஞ்சம் சிந்தித்தால்
அறியாமல் செய்துவந்த அச்செயலை மாற்றிடவும்
புரியாமல் செய்துவந்த புத்தியினை தீட்டிடவும்
தெரியாமல் செய்தவற்றை திருத்தவழி உண்டுபுள்ளே!

இந்தக் கொடுமைகூட எளிதாக மறந்திடலாம்
நந்தம் தமிழோடு நஞ்செனவே கிரந்தெழுத்தை
சொந்தம் கொண்டாடி சூசகமாய் நம்தமிழில்
வந்தேறி மொழிக்கலப்பை வதைக்கவழி என்னமச்சான்?

சஞ்சலம் தவிர்த்துவிடு சட்டென்றோர் வழிசொல்வேன்
அஞ்சாமல் நற்றமிழை அருமைமிகு தனித்தமிழை
நெஞ்சாரப் போற்றாமல் நீசமொழி கலந்துவக்கும்
வஞ்சகர் நாக்கறுக்க வழியொன்று உண்டுபுள்ளே!

கொஞ்சுமொழி பேசுகிற குழந்தைக்கும் இதைச்சொல்லி
வஞ்சனைகள் செய்கின்ற வாய்ச்சொல்லின் வீரர்களை
கெஞ்சினாலும் மிஞ்சினாலும் கிட்டவந்து துஞ்சினாலும்
அஞ்சாமல் வெஞ்சிறையில் அடைத்துநம் தமிழ்காப்போம்!

காப்போம் காப்போம் கழனிகள் காப்போம்
சேர்ப்போம் சேர்ப்போம் செழிப்பினை தமிழில்
மீட்போம் மீட்போம் மிடுக்குடன் தமிழை
ஓய்ப்போம் ஓய்ப்போம் கிரந்தெழுத் தினையே!
                 [30.12.2918]                                  

<பார்போற்றும் பாரதி>


பாரதிக்கு நேரென்றும் பாரதிதான் எனச்சொன்னால்
பாரெங்கும் நம்பெருமை பரவிடுமே எந்நாளும்
யாரென்ன சொன்னாலும் யாமறிந்த கவிஞர்களில்
மாறாத புகழ்சேர்த்த மாமனிதன் பாரதியே!

கவிதைகள் பலபுனைந்து கருத்துக்களைப் புகுத்தியவர்
செவியளவில் தேன்சொரியும் செய்திகளைச் சொல்லியவர்
அவிழாத  முடிச்சுகளை அவிழ்த்துவிடத் தோன்றியவர்
புவியெங்கும் பாரதியின் புகழ்பரப்பும் தமிழினமே!

வெள்ளையனை விரட்டிடவே வேலெடுக்க எண்ணவில்லை
பள்ளியிலே பைந்தமிழைப் புறந்தல்லச் சொல்லவில்லை
கிள்ளைமொழி தமிழ்மணத்தைக் கிளறிவிட்ட பெருமகனார்
கள்ளவிழும் கவிதைகளால் கட்டிநம்மைக் கவர்ந்தாரே!  

மெட்டுக்கவி பலபுனைந்து மேன்மக்கள் போற்றுகிற
சிட்டுக்கவி சிலவற்றால் சிறுவர்களை யும்கவர்ந்தார்
கட்டுக்கதை எழுதாமல் கணிப்புடனே கருத்துக்களை
சட்டெனத்தான் சொல்லிவைத்து சாதனைகள் படைத்தாரே!
  
கடவுளெங்கும் இல்லையெனக் கைபிசையும் கயவர்களை
மடையர்கள் என்றுரைத்த மாமனிதர் பாரதியார்
தொடைநடுங்க வெள்ளையனைத் துணிவோடு சாடியவர்
மடைதிறந்த வெள்ளமென மனமாறப் போற்றுவமே!    

பெண்ணடிமை போற்றுபவர் பேடியெனச் சொல்லிவைத்து
கண்ணியமாய் தன்வாழ்வில் கவிதைகளை யேபடைத்து
எண்ணியதம் கருத்துக்களை இசைவோடு எழுதியவர்
புண்ணியவான் பேரென்றும் புவியெங்கும் வாழியவே!

எங்கள் தமிழ் எங்கும் தமிழ்


எங்கெங்கும் தமிழென்றே மாற்றம் கண்டால்
    எந்நாளும் தமிழனுக்கோர் ஏற்றம் உண்டாம்
இங்கெவர்க்கும் தமிழ்காக்க தயக்கம் தோன்றின்
    இல்லாத துயரோடு மயக்கம் காண்பார்
செங்கரும்புச் சாரெனவே தமிழை அன்று
    சேரசோழ பாண்டியர்கள் சுவைத்தார் நன்று
பங்கமிலா நம்தமிழின் பெருமை சேர்ப்பும்   
    பைந்தமிழின் நிறைகாக்கும் அருமை வாய்ப்பே!

எங்கதமிழ் எங்கதமிழ் எனவே நாளும் 
    எட்டப்பன் மொழிபேச தமிழே நோகும்
தங்கமனம் குரங்காகி தளர்வும் கண்டு
    தறிகெட்டு புலம்புகிற பலரிங் குண்டு  
மன்றத்தில் பிறமொழிச்சொல் தவிர்த்த தில்லை  
    மதிகெட்ட மாந்தரிங்கு திருந்த வில்லை 
குன்றத்தில் ஏற்றிவைத்த விளக்காய் நின்று
   குணமாக நந்தமிழைக் காத்தல் நன்றே!  

எங்களுக்கும் காலமுண்டு என்றே நாளும்
    ஏற்றமுடன் போற்றதமிழ் நன்றே வாழும்
எங்கெங்கும் தமிழொன்றே நாட்டில் இன்றும்
    ஏட்டினிலே படைத்திடலாம் பாட்டில் என்றும்    
சங்கருப்ப தெம்தொழிலே சிவனார்க் கேதாம்
    சபையில்நக் கீரனன்று பதமாய்க் கேட்டார்  
இங்கிதமாய் வாதாடி வென்றார் அன்றே
     எம்பெருமான் சிவனருளைப் பெற்றார் நன்றே!   

துக்கத்தில் துணைகாக்கும் தமிழின் தொன்மை
    துயரத்தில் வழிகாட்டும் எதிலும் மெண்மை
தெக்கத்திச் சீமையிலே திகட்டும் வெல்லம்   
    தென்பாண்டி நாட்டினிலே பகட்டின் செல்லம் 
தக்கத்திமி தாளமிடும் இசையின் வெள்ளம்
    தரமில்லா மொழிபோற்றின் தோன்றும் பள்ளம்
சிக்கித்த விக்காமல் தமிழைக் காக்க
    சிறப்பான இடம்காணும் தமிழன் போக்கே!

உயிரும் மெய்யும் தமிழென்போம்


உயிரும் மெய்யும் தமிழென்றே
   உரக்கச் சொல்லும் கவியரங்கம்
குயிலும் மயிலும் ஒன்றாக
   கூடிப் பாடும் பயிலரங்கம்
செயலில் சொல்லில் தமிழ்போற்றி
    சிறகடித் தாடும் தமிழரங்கில்
அயலான் மொழிபல அறிந்தாலும்
     அம்மொழி வேண்டாம் இவ்வரங்கில்!

தமிழில் புனையும் கவிதைகளில்
   தனிச்சுவை உண்டென கண்டிடலாம் 
கமழும் மணமும் கண்டவர்கள்
   கண்முன் அதையும் விண்டிடலாம்
உமிழும் எச்சிலாய் நம்மிடையே
    உதவா மொழிகள் ஏராளம்
உமக்கே சொல்வேன் உரிமையுடன்
   உதறித் தள்ளுக பாராமல்!

திக்கெட் டினிலே நம்தமிழில்
   திருட்டு மொழிகள் நடமாட்டம்
அக்கம் பக்கம் பார்த்தால்நாம்
   அவற்றை நம்மிடை விடமாட்டோம்
தக்கத் திமியெனும் தாளத்தில்
    தரித்திரம் சேர்க்கும் மொழியெதற்கு?
கற்கண் டென்றோர் தனித்தமிழில் 
     கலப்படம் செய்யும் பழியெதற்கு? 

பயிலும் பாடம் தமிழென்றால்
   பாரில் புகழ்பல பெற்றிடலாம்
துயிலில் கனவில் தமிழென்றால்
   தொடரும் வெற்றிகள் தொட்டிலாம் 
அயலான் மொழியை அறுத்தெறிந்தால்
   அருமைத் தமிழைக் காத்திடலாம்
புயலாய் இன்றே புறப்படுவோம்
    பூமியில் நம்கொடி நாட்டிடலாம்.

கங்கை யமுனை காவிரிபோல்
     கடந்தே உலகில் நந்தமிழை
செங்கோல் பாண்டியன் சேரசோழர்
     செப்பிய முறையில் செந்தமிழை
மங்காப் புகழின் உச்சியிலே
     மடியில் தவழ்ந்தே மலரட்டும்
எங்கும் தமிழ்மொழி ஒன்றெனவே
     ஏற்றம் கண்டே வளரட்டும்.

16.12.2018

தைமகளே தைமகளே வருக! தமிழருக்கு தமிழ்ப்பற்றை தருக (கவியரங்கம்)

            மாமதுரைக் கவிஞர் சின்ன சின்னப்பூக்கள் திரு. பூ.வைத்தியலிங்கம் அவர்களின் மறைவுக்கு மவுன அஞ்சலி...